ADDED : ஜூலை 11, 2025 12:46 AM

இஸ்லாமாபாத்:''இந்தியாவுக்கு எதிராக தாக்குதல்களில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் எங்கள் நாட்டில் தான் உள்ளனர். ஆனால் அந்த தாக்குதல்களை அரசு துாண்டிவிடவில்லை. பயங்கரவாதத்தால் நாங்களும் பாதிக்கப்பட்டுள்ளோம்,'' என, பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலவல் புட்டோ கூறியுள்ளார்.
பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான பிலவல் புட்டோ பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது:
இந்தியாவின் ஜம்மு - காஷ்மீர் பஹல்காமில் கடந்த ஏப்.,ல் நடந்த சம்பவம், பயங்கரவாத தாக்குதலே. இதுபோன்ற தாக்குதல்களை நாங்கள் எதிர்க்கிறோம்.
பயங்கரவாதத்தால், பாகிஸ்தானும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை, 92,000 பேர் உயிரிழந்துள்ளனர். தனிப்பட்ட முறையில், என் குடும்பமும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான விடுதலைக்காக உருவாக்கப்பட்ட விடுதலைக் குழுக்களே, பயங்கரவாத அமைப்புகளாக மாறியுள்ளன. அந்நாட்டுக்கு எதிராக, அப்போதைய பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் வாயிலாக, வெளிநாட்டு சக்திகள் இவர்களை வளர்த்து விட்டன; இதுதான் உண்மை.
லஷ்கர் - இ - தொய்பா, ஜெய்ஷ் - இ - முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகள் பாகிஸ்தானில் உள்ளன. ஆனால், எந்த ஒரு வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் தாக்குதல்களை நடத்துவதற்கு அவர்களை பாகிஸ்தான் அரசு பயன்படுத்துவதில்லை. அதற்கு அனுமதிப்பதும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.