பயங்கரவாதத்திற்கு எதிராக பாக்., ராணுவ தளபதி கதறல்
பயங்கரவாதத்திற்கு எதிராக பாக்., ராணுவ தளபதி கதறல்
ADDED : மார் 20, 2026 04:49 AM

இஸ்லாமாபாத்: “ஆப்கானிஸ்தானை பயன்படுத்தி தங்களுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்,” என, பாகிஸ்தான் ராணுவ தளபதி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானுக்கும், அதன் அண்டை நாடான ஆப்கானிஸ்தானுக்கும் இடையே சமீபகாலமாக மோதல் முற்றி வருகிறது.
தெஹ்ரிக் - இ - தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுக்கிறது என்பதே பாகிஸ்தானின் குற்றச்சாட்டு.
இந்நிலையில், பாக்., தலைமை ராணுவ தளபதியான அசிம் முனீர், ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு, தங்கள் மண்ணை பயங்கரவாதத்துக்கு எதிராக பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி உள்ளார்.
ராவல்பிண்டியில் ஷியா முஸ்லிம் மதகுருமார்களை சந்தித்த பின், அவர் கூறியதாவது:
'கஜப் லில் ஹக்' என்ற பெயரில் பயங்கரவாதத்திற்கு எதிரான ராணுவ நடவடிக்கையை கடந்த மாதம் துவங்கினோம். பாகிஸ்தானுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாதிகளையும், அவர்களின் உட்கட்டமைப்புகளையும் முற்றிலும் ஒழிப்பதில் உறுதியாக உள்ளோம். ஆப்கன் மண்ணை பயங்கரவாதத்துக்கு பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டும், சவுதி அரேபியா, துருக்கி, கத்தார் ஆகிய நாடுகளின் கோரிக்கையின் பேரிலும், பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் போரை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.
சில தினங்களுக்கு முன், காபூலில் பாக்., நடத்திய தாக்குதலில் 400 பேர் கொல்லப்பட்டதாக ஆப்கன் அரசு குற்றஞ்சாட்டியதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

