ADDED : டிச 06, 2025 12:37 AM

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முப் படைகளின் தலைமை தளபதியாக, அந்நாட்டின் ராணுவ தளபதி அசிம் முனீர் நியமிக்கப்பட்டு உள்ளார். சக்தி வாய்ந்த பொறுப்பில் ஐந்து ஆண்டு களுக்கு நியமிக்கப் பட்டுள்ள அவரிடம், அணு ஆயுதம் முதல் நீதித்துறை வரை, முக்கிய முடிவுகள் எடுக்கும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் உள்ளார். அந்நாட்டின் ராணுவ தளபதியாக உள்ள அசிம் முனீரின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் வகையில், அரசியல் சாசனத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி, 'முப் படைகளின் தலைமை தளபதி' என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டது.
இந்நிலையில் பாக்., முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக, அசிம் முனீர் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப் பட்டுள்ளார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இப்பதவியில் நீடிக்க உள்ள அவர், ராணுவம், கடற்படை, விமானப்படை என மூன்றையும் கட்டுப்படுத்தலாம். இது தவிர, ராணுவ தளபதியாகவும் அசிம் முனீர் நீடிப்பார்.
பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை அமைப்புகளை நிர்வகிக்கும் பொறுப்பும் இப்பதவியின் மூலம் அசிம் முனீருக்கு சென்றுள்ளது. இதனால், அந்நாட்டின் சக்திவாய்ந்த நபராக அவர் மாறியுள்ளார். இது, அதிபருக்கு இணையான சட்டப் பாதுகாப்பையும் வழங்கியுள்ளது.

