டிரம்பை வாழ்த்திய பாக்., பிரதமர்; குறிப்பு வெளியிட்டு மானத்தை வாங்கிய எக்ஸ்!
டிரம்பை வாழ்த்திய பாக்., பிரதமர்; குறிப்பு வெளியிட்டு மானத்தை வாங்கிய எக்ஸ்!
ADDED : நவ 09, 2024 11:27 AM

இஸ்லாமாபாத்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்புக்கு, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்தார்; அவரே தடை செய்துவிட்டு, தடையை மீறி அவரே பதிவிட்டுள்ளதாக எக்ஸ்தளம் குறிப்பு வெளியிட்டு மானத்தை வாங்கியது.
இந்த ஆண்டின் துவக்கத்தில் தேசிய பாதுகாப்பு பிரச்னைகளை காரணம் காட்டி, எக்ஸ் சமூகவலைதளத்திற்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்தது. பயங்கரவாதிகள் தங்கள் தேசவிரோத செயல்களுக்கு, எக்ஸ் சமூகவலைதளத்தை பயன்படுத்துவதாகவும் அரசு குற்றம் சாட்டியது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்புக்கு, எக்ஸ் சமூக வலைதளத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வாழ்த்து தெரிவித்தார். அவர் வாழ்த்து செய்தியில்,' வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ள டிரம்புக்கு வாழ்த்துகள். இரு நாடுகளின் உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் உங்களுடன் பணியாற்ற விரும்புகிறேன்' என குறிப்பிட்டு இருந்தார்.
இதையடுத்து அந்த வாழ்த்துப் பதிவில் எக்ஸ் தளம் சார்பில் கம்யூனிட்டி நோட் வெளியிடப்பட்டது. அவரே பாகிஸ்தானில் எக்ஸ் தளத்தை தடை செய்துவிட்டு, தடையை மீறி பதிவும் வெளியிட்டுள்ளதாக எக்ஸ் தளம் குறிப்பு வெளியிட்டது. விபிஎன் மூலம் எக்ஸ் தளத்தை பயன்படுத்தி உள்ளதாகவும், தடையை மீறியதால், அவர் ஒரு கிரிமினல் என்றும் அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கு எதிராக இணையதளத்தில் விமர்சனம் கிளம்பி உள்ளது. எக்ஸ் பயனர்கள் பலரும், 'பாசாங்குத்தனத்திற்கு மனித முகம் இருந்தால், அது ஷெபாஸ் ஷெரீப் தான்' என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
இதற்கிடையில், பாகிஸ்தானின் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் மும்தாஜ் கூறியதாவது: 'பாகிஸ்தானும் அமெரிக்காவும் பழைய நண்பர்கள் மற்றும் பங்காளிகள். அமெரிக்காவுடனான எங்கள் உறவு பல தசாப்தங்களாக உள்ளது. மேலும் அனைத்து துறைகளிலும் பாகிஸ்தான்-அமெரிக்கா இடையே உறவை மேலும் வலுப்படுத்தவும், விரிவுபடுத்தவும் நாங்கள் எதிர்நோக்குகிறோம்'. இவ்வாறு அவர் கூறினார்.