பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்; 21 பேர் பரிதாப பலி
பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்; 21 பேர் பரிதாப பலி
ADDED : நவ 09, 2024 11:36 AM

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் இன்று (நவ.,09) குண்டுவெடிப்பு நடந்தது. இதில் ரயில் நிலையத்தில் கூடியிருந்த பயணிகள் 21 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்றனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
குண்டுவெடிப்பு நடந்த போது, பெஷாவர் செல்லும் பயணிகள் ரயில் ஒன்று நடைமேடையில் நின்றுகொண்டிருந்தது. இந்த ரயிலில் இருந்த மக்கள் குண்டுவெடிக்கும் சத்தத்தை கேட்டு அலறி அடித்து கொண்டு ஓடும் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இது குறித்து, குவெட்டாவின் எஸ்.எஸ்.பி., முகமது பலோச் கூறியதாவது: இது தற்கொலைப் படைத் தாக்குதல் போல் தெரிகிறது. இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார். இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.