ஊழல் வழக்கில் இம்ரான் கான், மனைவி புஷ்ராவுக்கு 10 ஆண்டு சிறை
ஊழல் வழக்கில் இம்ரான் கான், மனைவி புஷ்ராவுக்கு 10 ஆண்டு சிறை
UPDATED : ஜன 31, 2024 12:54 PM
ADDED : ஜன 31, 2024 12:51 PM

இஸ்லாமாபாத்: பரிசுப் பொருட்களை அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல், அதனை விற்று சொத்து சேர்த்து ஊழல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.
பாகிஸ்தானில் பிரதமராக இருந்த இம்ரான் கான் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில், அவர் தோல்வியடைந்ததால் பதவியிழந்தார். இதன் பிறகு அவர் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. ரகசியக் காப்புறுதி மீறல் வழக்கில் இம்ரான் கானுக்கு அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் அவருக்கு இது பின்னடைவை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இம்ரான் கான் பிரதமராக பதவி வகித்த போது வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களிடம் இருந்து பெற்ற பரிசுப் பொருட்களை அரசு கருவூலமான தோஷகானா என்ற துறையிடம் ஒப்படைக்காமல் விற்று சொத்து சேர்த்து ஊழலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
தோஷகானா வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது, இம்ரான் கான் மற்றும் புஷ்ரா பீபி குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியதுடன், 14 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டது. இருவரும் 10 ஆண்டுகளுக்கு அரசு பதவி வகிக்கவும் தடை விதிக்கப்பட்டதுடன், 787 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட சிறை தண்டனையுடன் இதனை சேர்த்து அனுபவிக்க வேண்டுமா அல்லது தனியாக அனுபவிக்க வேண்டுமா என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.