நடிகர்கள் திலீப் குமார், ராஜ் கபூர் வீடுகளை புனரமைக்கும் பாகிஸ்தான்
நடிகர்கள் திலீப் குமார், ராஜ் கபூர் வீடுகளை புனரமைக்கும் பாகிஸ்தான்
ADDED : ஜூலை 29, 2025 05:54 AM

பெஷாவர்: பிரபல ஹிந்தி நடிகர்களான திலீப் குமார் மற்றும் ராஜ் கபூருக்கு சொந்தமான பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள அவர்களின் மூதாதையர் வீடுகளில் புனரமைப்பு பணிகளை துவங்கியதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இந்திய சினிமாவின் புகழ்பெற்ற நடிகர்களான திலீப்குமார் மற்றும் ராஜ் கபூர், பாகிஸ்தானின் உள்ள பெஷாவரில் பிறந்து வளர்ந்தவர்கள். பிரிவினைக்குப் பின், மஹாராஷ்டிராவின் மும்பைக்கு குடிபெயர்ந்தனர். பாலிவுட்டில் நுழைந்து நடிகர், இயக்குநராக பிரபலமானார்.
பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் உள்ள அவர்களுடைய மூதாதையர் வீடுகளை, 2014ல் அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப், பாகிஸ்தானின் பாரம்பரிய தலங்களாக அறிவித்தார்.
கட்டடங்களை அதன் பழமை மாறாமல் புனரமைக்கும் பொறுப்பு, தொல்பொருள் மற்றும் அருங்காட்சியக இயக்குநரகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. திலீப் குமார் மற்றும் ராஜ் கபூரின் நிஜ மற்றும் சினிமா வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக அவர்கள் வாழ்ந்த வீடுகளை அருங்காட்சியகங்களாக மாற்ற மாகாண தொல்பொருள் துறை திட்டமிட்டுள்ளது.
இதற்காக, 7 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. உலக வங்கியின் ஆதரவுடன், மாகாணத்தில் பாரம்பரிய பாதுகாப்பு மற்றும் சுற்றுலா மேம்பாட்டிற்கான முக்கிய திட்டங்களுள் ஒன்றாக இந்த புனரமைப்பு பணி துவங்கப்பட்டுள்ளது.

