விண்வெளிக்கு முதல் முறையாக வீரரை அனுப்புகிறது பாகிஸ்தான் சீனா அழைத்து செல்கிறது
விண்வெளிக்கு முதல் முறையாக வீரரை அனுப்புகிறது பாகிஸ்தான் சீனா அழைத்து செல்கிறது
UPDATED : நவ 24, 2026 06:44 PM
ADDED : நவ 24, 2026 06:44 PM

பீஜிங்: சீனாவின், ‘ஷென்சோ – 24’ விண்கல பயணத்தில், பாகிஸ்தானைச் சேர்ந்த விண்வெளி வீரர் முகமது ஜீஷான் அலி, 40, பங்கேற்கிறார். இதன் மூலம் விண்வெளிக்கு செல்லும் முதல் பாகிஸ்தான் வீரர் என்பதுடன், சீன விண்வெளி நிலையத்திற்கு செல்லும் முதல் வெளிநாட்டு வீரராகிறார்.
நம் அண்டை நாடான சீனாவை சர்வதேச விண்வெளி நிலையத்தில் பங்கேற்க அமெரிக்கா தடை விதித்தது. இதையடுத்து, சீனா தனக்கென தனி விண்வெளி நிலையத்தை, `தியாங்காங்' என்ற பெயரில் உருவாக்கியது. இது பூமியில் இருந்து 340 முதல் 450 கி.மீ., உயரத்தில் பூமியை சுற்றி வருகிறது.
இதில் வழக்கமாக மூன்று விண்வெளி வீரர்கள் ஆறு மாதங்கள் வரை தங்கியிருந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடியும். குழு மாற்றத்தின் போது ஆறு வீரர்கள் வரை அங்கு இருக்க முடியும்.
இந்த விண்வெளி மையத்துக்கு செல்லும் அடுத்த குழுவை சீனா அறிவித்துள்ளது. இதன்படி, சீன விண்வெளி வீரர்கள் இருவருடன், முகமது ஜீஷான் அலி என்ற பாகிஸ்தானின் விமானப்படை விமானியும் செல்ல உள்ளார்.
சீனாவின் ஜியுகுவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து, `லாங் மார்ச் – 2 எப்' ராக்கெட் மூலம் ஷென்சோ – 24 என்ற விண்கலம் இந்திய நேரப்படி இன்று காலை ஏவப்பட உள்ளது.
பாகிஸ்தான் விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளித்து விண்ணுக்கு அனுப்புவது தொடர்பாக கடந்தாண்டு பிப்ரவரியில் சீனா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் முகமது ஜீஷான் அலி அனுப்புப்படுவதாக கூறப்படுகிறது.
சீனாவின் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் வெளிநாட்டு விண்வெளி வீரர் ஒருவர் பங்கேற்பதும், சீனாவின் தியாங்காங் விண்வெளி நிலையத்துக்கு செல்வதும் இதுவே முதல் முறையாகும்.
ஒரு வாரம் தங்கியிருக்கும் அலி, நான்கு அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்ள உள்ளார். அதன்பின், அவர் ஷென்சோ – 23 விண்கலம் வாயிலாக பூமிக்கு திரும்புவார் என, சீனா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன், 2023 அக்டோபரில், பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் தொழிலதிபரும், சாகச பயணியுமான நமிரா சலீம், விண்வெளிக்கு சென்றார். அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளிக்கு சுற்றுலாவுக்கு அழைத்து செல்லும், `விர்ஜின் கேலக்டிக்' விண்கலத்தில் அவர் பயணம் செய்தார். ஆனால், விண்வெளியில் துணை சுற்றுப்பாதை வரை மட்டுமே அவர் சென்றார்.
