இந்தியாவுடன் போரிடுவதால் பாகிஸ்தானுக்கு 'பலனில்லை!' : முன்னாள் அதிகாரி வெளிப்படை
இந்தியாவுடன் போரிடுவதால் பாகிஸ்தானுக்கு 'பலனில்லை!' : முன்னாள் அதிகாரி வெளிப்படை
UPDATED : அக் 25, 2025 11:52 PM
ADDED : அக் 25, 2025 11:18 PM

புதுடில்லி, 'இந்தியாவுடன் போரிடுவதால் பாகிஸ்தானுக்கு எந்த பலனும் இல்லை' என, அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ.,வின் முன்னாள் அதிகாரி ஜான் கிரியாகோவ் கூறியுள்ளார். பாகிஸ்தானின் அணு ஆயுதக் கட்டுப்பாட்டை அமெரிக்கா வைத்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ., வின் முன்னாள் அதிகாரி ஜான் கிரியாகோவ், 15 ஆண்டுகள் அந்த அமைப்பில் பணியாற்றினார். குறிப்பாக நம் அண்டை நாடான பாகிஸ்தானில் நீண்ட காலம் பணியாற்றினார். சி.ஐ.ஏ., குறித்த ரகசிய தகவல்களை கசியவிட்டதற்காக 2007ல் அமெரிக்காவில், 23 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
தன் பணியின் போது சந்தித்த அனுபவங்கள், குறிப்பாக, இந்தியா - பாகிஸ்தான் உறவுகள் குறித்து, தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது :
இந்தியாவுடன் வழக்கமான போரில் ஈடுபட்டால், பாகிஸ்தான் தோல்வியைத்தான் தழுவும். நான் சொல்வது அணு ஆயுத போர் பற்றி அல்ல.
இந்தியாவுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருவதால் பாகிஸ்தானுக்கு எந்த பலனோ, நன்மையோ கிடைக்கப் போவது இல்லை.
தன் சொந்த நலன்களே பாதிக்கப்படும் என்பதை பாகிஸ்தான் உணர வேண்டும். எல்லை தாண்டிய பயங்கரவாதத்துகுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து கடுமையான பதில்களை கொடுத்து வருகிறது .
கடந்த 2016ல் சர்ஜிக்கல் ஸ்டிரைக், 2019ல் பாலகோட் வான்வழி தாக்குதல் மற்றும் சமீபத்திய, 'ஆப்பரேஷன் சிந்துார்' போன்ற நடவடிக்கைகளை இதற்கு உதாரணமாக கூறலாம்.
கடந்த, 2002ம் ஆண்டில், அல் - குவைதாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் அமெரிக்கா மிகவும் தீவிரமாக இருந்தது. அதனால், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பிரச்னைகளில் கவனம் செலுத்தவில்லை.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் உடன் அமெரிக்காவின் உறவு நன்றாக இருந்தது. முஷாரப் ஒத்துழைப்பை அமெரிக்கா விலைக்கு வாங்கியது என்றே சொல்ல வேண்டும். அந்த நாட்டின் அணு ஆயுதங்கள் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்தன.
அமெரிக்கா தனக்கு தேவையானதை செய்து கொள்ள முஷாரப் அனுமதித்தார். இதற்காக பாகிஸ்தானின் ராணுவம் மற்றும் பொருளாதார உதவிகளுக்காக கோடிக்கணக்கான டாலர்களை வழங்கியது.
ஆனால், அந்த நிதிகளை, தன் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,க்கும், பயங்கரவாத குழுக்களை ஆதரிக்கவும் பாகிஸ்தான் அரசு பயன்படுத்தியது. இவ்வாறு அவர் கூறினார்.

