ஆப்பரேஷன் சிந்தூரில் பயத்தில் உறைந்த பாக்., தலைவர்கள்: அதிபர் சர்தாரி ஒப்புதல்
ஆப்பரேஷன் சிந்தூரில் பயத்தில் உறைந்த பாக்., தலைவர்கள்: அதிபர் சர்தாரி ஒப்புதல்
ADDED : டிச 28, 2025 06:57 PM

இஸ்லாமாபாத்: ' ஆப்பரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது பாக்., ராணுவத்துக்கு மட்டுமல்லாமல், அந்நாட்டு தலைவர்களுக்கும் பயத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை அந்நாட்டு அதிபர் ஆசிப் அலி சர்தாரி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது ஒப்புக் கொண்டார்.
ஜம்மு -- காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, மே 7ல், 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில், பாகிஸ்தானில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்களை நம் படைகள் தகர்த்தன. நம் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பாக்., கெஞ்சியதை அடுத்து, சண்டை முடிவுக்கு வந்தது.
இந்தியாவின் தாக்குதலை கண்டு பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு மட்டும் அல்லாமல், அந்நாட்டு தலைவர்களுக்கும் பயத்தை ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி கூறியதாவது: ஆப்பரேஷன் சிந்தூர் துவங்கிய நேரத்தில் எனது ராணுவ செயலாளர் அருகில் உடன் இருந்தார். அவர் என்னிடம் வந்து, ' போர் துவங்கிவிட்டது ' எனத் தெரிவித்தார்.ஆனால், அதற்கு நான்கு நாட்களுக்கு முன்னரே விரைவில் போர் துவங்க வாய்ப்பு இருக்கிறது எனத் தெரிவித்து இருந்தேன். இதனால், அவர் புதியதாக இல்லை. அவர் என்னிடம் வந்து, நாம் பதுங்குக்குழிக்குள் சென்று விடுவோம் எனத் தெரிவித்தார்.அதற்கு நான்,' தலைவர்கள் பதுங்குக்குழிக்குள் மரணமடையக்கூடாது. போர்க்களத்தில் தான் இருக்க வேண்டும். பதுங்குக்குழிக்குள் இருக்கக்கூடாது' எனத் தெரிவித்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

