நேபாளம் வழியாக இந்தியாவை தாக்க பாக்., பயங்கரவாதிகள் திட்டம்
நேபாளம் வழியாக இந்தியாவை தாக்க பாக்., பயங்கரவாதிகள் திட்டம்
ADDED : ஜூலை 12, 2025 02:10 AM
காத்மாண்டு:பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் -- இ -- தொய்பா மற்றும் ஜெய்ஷ் -- இ - முகமது பயங்கரவாதிகள் நேபாளம் வழியாக இந்தியாவை மீண்டும் தாக்க திட்டமிட்டு வருவதாக, அந்நாட்டு அதிபரின் ஆலோசகர் சுனில் பஹதுார் தாபா எச்சரித்துள்ளார்.
நம் அண்டை நாடான நேபாளத்துடன், 1,751 கி.மீ., நீள எல்லையை நாம் பகிர்ந்து கொள்கிறோம். இந்த எல்லையில் குறைவான இடங்களில் மட்டுமே சோதனைச் சாவடிகள் உள்ளதால், பயங்கரவாதிகள் ஊடுருவலை எளிதாக்குகிறது.
ஆப்பரேஷன் சிந்துார்
போலியான நேபாள அடையாள அட்டையை பயன்படுத்தி இவர்கள் நம் நாட்டுக்குள் ஊடுருவுகின்றனர். கடந்த சில ஆண்டுகளில் மட்டும் இவ்வாறு ஊடுருவ முயன்ற பல்வேறு பாகிஸ்தான் பயங்கரவாதிகள், நம் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தானின் லஷ்கர் -- இ - தொய்பாவின் துணை அமைப்பான 'தி ரெசிஸ்டன்ஸ் ப்ரன்ட்' ஏப்ரலில் தாக்குதல் நடத்தியது.
இதற்கு பதிலடியாக பாகிஸ்தானின் பயங்கரவாத தளங்களையும், அந்நாட்டு ராணுவத்தின் உள்கட்டமைப்புகளையும் நம் ராணுவம், 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது. இதையடுத்து, எல்லைகள் அனைத்தும் தீவிர கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, நேபாளத்தின் காத்மாண்டுவில், சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் தொடர்பு நிறுவனம் சார்பில் கருத்தரங்கு சமீபத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற நேபாள அதிபர் ராம் சந்திர பவுதலின் ஆலோசகர் சுனில் பஹதுார் தாபா பேசியதாவது: இந்தியாவில் நடக்கும் பயங்கரவாத தாக்குதல்கள் நேபாளத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இவை, பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பாதிக்கின்றன.
உளவு தகவல் பகிர்வு
பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புகளான லஷ்கர்- - இ - -தொய்பா மற்றும் ஜெய்ஷ் - -இ - -முகமது, இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளன. இந்த குழுக்கள், நேபாளத்தை ஒரு பயண வழியாக பயன்படுத்தி இந்தியாவை குறிவைக்க காத்திருக்கின்றன.
இதை எதிர்கொள்ள, பயங்கரவாதத்துக்கு நிதி செல்வதை தடுத்தல், உளவு தகவல் பகிர்வு மற்றும் எல்லையில் கூட்டு ரோந்து ஆகியவற்றில் இரு நாடுகளுக்கிடையே வலுவான ஒத்துழைப்பு தேவை. இவ்வாறு அவர் பேசினார்.