ADDED : டிச 07, 2025 09:55 PM

புதுடில்லி: கணவர் தன்னை கைவிட்டு டில்லியில் இரண்டாவது திருமணம் செய்ய உள்ளதாகவும், தனக்கு நீதி கிடைக்க பிரதமர் மோடி உதவி செய்ய வேண்டும் என பாகிஸ்தானிய பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
பாகிஸ்தானின் கராச்சி நகரைச் சேர்ந்தவர் நிகிதா. இவருக்கும், அந்நாட்டை சேர்ந்த விக்ரம் என்பவருக்கும், ஹிந்து பாரம்பரிய முறைப்படி கராச்சியில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த பிறகு 2020 பிப்.,26 ல் நிகிதாவை இந்தியாவுக்கு விக்ரம் அழைத்து வந்தார். இவர், நீண்ட கால விசாரவில் மத்திய பிரதேச மாநிலத்தில் வசித்து வருகிறார்.
அதே ஆண்டு ஜூலை மாதம் விசாவில் பிரச்னை எனக்கூறி, நிகிதாவை அட்டாரி எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு வலுக்கட்டாயமாக அனப்பிவைத்துள்ளார். அதன் பிறகு அவரை , விக்ரம் தொடர்பு கொள்ளவில்லை. தன்னை அழைக்க முயற்சிக்கவில்லை என நிகிதா குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக நிகிதா வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது: என்னை அழைத்துக் கொள்ளும்படி பல முறை விக்ரமிடம் வலியுறுத்தினேன். ஆனால், ஒவ்வொரு முறையும் அவர் மறுத்து வருகிறார்.
திருமணம் முடிந்து கணவர் வீட்டிக்கு வந்த போது, மாமியார், மாமனார் உள்ளிட்டோரின் நடவடிக்கைகள் முற்றிலும் மாறின. எனது உறவுப்பெண் ஒருவருடன், விக்ரமுக்கு திருமணத்தை மீறிய உறவு உள்ளது. இதனை மாமனாரிடம் தெரிவித்த போது, ஆண்கள் அப்படி செய்வது வழக்கம். அதில் ஒன்றும் செய்ய முடியாது எனத் தெரிவித்தார்.
எனக்கு நீதி கிடைக்காவிட்டால், பெண்கள் அனைவரும் நீதி மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இழந்துவிடுவார்கள். ஏராளமான பெண்கள், திருமணமான பின்பு உடல் மற்றும் மன ரீதியாக பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். அனைவரும் எனக்கு ஆதரவாக நிற்க வேண்டும். எனக்கு நீதி கிடைக்க பிரதமர் உதவி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
விக்ரம் டில்லியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் இரண்டாவது திருமணம் செய்ய முயற்சி செய்வதாக குற்றம்சாட்டியுள்ள நிகிதா, இது குறித்து புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக மபி ஐகோர்ட் அமைத்த சட்ட உதவி மையம் விசாரணை நடத்தியது. விக்ரமுக்கும் அவர் திருமணம் செய்ய உள்ள பெண்ணுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், சமரச முயற்சி தோல்வியடைந்தது.இந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில், பாதிக்கப்பட்ட பெண் இந்தியாவைச் சேர்ந்தவர் இல்லை என்பதால், இந்த விவகாரம் பாகிஸ்தான் சட்ட வரம்பில் வருகிறது. விக்ரமை பாகிஸ்தானுக்கு நாடு கடத்த உத்தரவிடும்படி தெரிவித்து இருந்தது.
இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனவும், அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் ஆஷிஸ் சிங் தெரிவித்துள்ளார்.

