2035க்குள் நிலவுக்கு செல்ல பாக்., ஆர்வம்: சீனாவிடம் உதவி கேட்கிறது
2035க்குள் நிலவுக்கு செல்ல பாக்., ஆர்வம்: சீனாவிடம் உதவி கேட்கிறது
ADDED : ஆக 07, 2025 05:29 AM

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் 2035ம் ஆண்டுக்குள் சீனாவின் ஆதரவுடன் நிலவில் விண்கலத்தை இறக்க திட்டமிட்டுள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தா னின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு, 'சுபார்கோ'.
க டந்த 1961ல் இந்த அமைப்பு துவங்கப்பட்டாலும் பயங்கரவாதம், அரசியல் குழப்பம், பொருளாதார பிரச்னை போன்றவற்றால் இத்துறை இதுவரை தானே ஒரு செயற்கைக்கோளை கூட ஏவியதில்லை. இதுவரை, எட்டு செயற்கைக்கோள்களை பாகிஸ்தான் அனுப்பியுள்ளது. ஆனால், சீனாவின் முதுகிலேயே சவாரி செய்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானின் திட்டம் மற்றும் சிறப்பு முயற்சிகளுக்கான அமைச்சர் அஹ்சன் இக்பால், கடந்த 4ம் தேதி சீனா சென்று, அந்நாட்டு அணுசக்தி மற்றும் விண்வெளி முகமையின் தலைவர் ஷான் ஜொங்டேவை சந்தித்தார். அவரிடம் அணுசக்தி மற்றும் விண்வெளி துறையில் ஆழமான ஒத்துழைப்பு தேவை என பாகிஸ்தான் அமைச்சர் வலியுறுத்தினார்.
கூட்டத்திற்கு பின் அவர் கூறியதாவது:
பாகிஸ்தான் 2035க்குள் சீனாவின் ஆதரவுடன் நிலவில் தடம் பதிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்னோட்டமாக, 2028ல் நிலவுக்கு விண்கலம் அனுப்பும் சீனாவின் சேஞ்ச் - 8 திட்டத்தில் 35 கிலோ எடையுள்ள 'ரோவர்' எனப்படும் நிலவில் ஆய்வு செய்யும் சாதனம் ஒன்றை பாகிஸ்தான் வழங்கும்.
இந்த ரோவர் நிலவின் தென் துருவத்தில் அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்ளும்.
அடுத்த ஆண்டில், முதல் முறையாக விண்வெளிக்கு முதல் பாகிஸ்தான் வீரர் பயணம் செய்வார் என நம்புகிறோம். அவர் சீனாவின் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்படுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.

