பாக்.,கின் ஐ.எஸ்.ஐ., வங்கதேசத்துக்கு ரகசிய பயணம்!:நிலைமையை கண்காணிக்கிறது மத்திய அரசு
பாக்.,கின் ஐ.எஸ்.ஐ., வங்கதேசத்துக்கு ரகசிய பயணம்!:நிலைமையை கண்காணிக்கிறது மத்திய அரசு
ADDED : ஜன 25, 2025 11:39 PM

டாக்கா: பாகிஸ்தானுக்கு வங்கதேச ராணுவக் குழு பயணம் மேற்கொண்ட நிலையில், தற்போது, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., உயரதிகாரிகள் சிலர், வங்கதேசத்துக்கு ரகசிய பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த பயணங்களின் நோக்கம் மற்றும் முன்னேற்றம் குறித்து தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நம் அண்டை நாடான வங்கதேசம், 1971ல் பாகிஸ்தானில் இருந்து பிரிந்து தனி நாடானது.
அப்போது, நடந்த போரில், வங்கதேசத்தின் விடுதலைக்கு இந்தியா பெரிதும் உதவியது. இதனால், இந்தியா, வங்கதேசம் இடையே எப்போதும் நல்ல நட்புறவு உள்ளது.
சமீபத்தில் அங்கு இடஒதுக்கீடு தொடர்பான போராட்டங்களால் வன்முறை வெடித்தது. இதையடுத்து, பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, நம் நாட்டில் தஞ்சமடைந்து உள்ளார்.
ஆறு பேர்
நோபல் பரிசு வென்ற முகமது யூனிஸ் தலைமையில் அங்கு தற்போது இடைக்கால அரசு அமைந்துள்ளது. ராணுவத்தின் உதவியுடன் இந்த இடைக்கால அரசு செயல்பட்டு வருகிறது.
வங்கதேச ராணுவத்தின் உயரதிகாரியான லெப்டினென்ட் ஜெனரல் கம்ருல் ஹசன் தலைமையில், ஆறு பேர் அடங்கிய குழு, கடந்த 13 முதல் 18ம் தேதி வரை, பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டது.
ராவல்பிண்டியில் உள்ள பாகிஸ்தான் ராணுவ தலைமையகத்தில், பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அசிம் முனிர் உள்ளிட்டோரை அந்த குழுவினர் சந்தித்து பேசினர். இதற்கிடையே, கடந்த, 21ம் தேதி பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யின் உயரதிகாரிகள் மூன்று பேர், வங்கதேசத்துக்கு ரகசிய பயணம் மேற்கொண்டனர்.
ஐ.எஸ்.ஐ.,யின் பகுப்பாய்வு பிரிவின் டைரக்டர் ஜெனரல் மேஜர் ஜெனரல் ஷாஹித் அமிர் அப்சர் தலைமையில், இந்தக் குழு தற்போதும் வங்கதேசத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராவல்பிண்டியில் இருந்து துபாய் வழியாக இவர்கள் வங்கதேசம் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடவடிக்கை
ஆனால், இந்தப் பயணம் தொடர்பாக, பாகிஸ்தானோ, வங்கதேசமோ எந்த ஒரு தகவலும் வெளியிடவில்லை. சமீபத்தில் வங்கதேச ராணுவ குழுவினர் பாகிஸ்தானுக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பான செய்திகளை பாகிஸ்தான் வெளியிட்டது.
வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் இடையேயான இந்த திடீர் சந்திப்புகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாக, மத்திய அரசு தெரிவித்துஉள்ளது.
குறிப்பாக இதனால், நம் நாட்டின் பாதுகாப்புக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா என்பது கவனிக்கப்படுவதாகவும், தேவைப்பட்டால், நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளதாகவும், நம் வெளியுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.