அமெரிக்க அதிபர் டிரம்பின் மிரட்டலுக்கு பணிந்தது பனாமா
அமெரிக்க அதிபர் டிரம்பின் மிரட்டலுக்கு பணிந்தது பனாமா
ADDED : பிப் 04, 2025 01:01 AM

பனாமா சிட்டி : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் தொடர் மிரட்டல்களுக்கு, பனாமா நாடு அடிப்பணிந்தது. சீனாவுடனான ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வதாக உறுதி அளித்துள்ளது.
மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் அமைந்துள்ளது பனாமா கால்வாய். கரீபியன் கடல் மற்றும் பசிபிக் பெருங்கடலை இணைக்கும் வகையில், 82 கி.மீ., துாரத்துக்கு அமைந்துள்ளது இந்த கால்வாய்.
உலகின் கடல்சார் வணிகத்தில், 5 சதவீதமும், அமெரிக்காவின் வர்த்தகத்தில், 50 சதவீதமும், இந்த கால்வாய் வழியாகவே நடக்கின்றன. உலகின் முக்கிய கடல்சார் வணிகத்துக்கான இணைப்பாக இந்த கால்வாய் உள்ளது.
கடந்த, 1977ல் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி, இந்த கால்வாயை நிர்வகிக்கும் உரிமையை பனாமாவுக்கு அமெரிக்கா வழங்கியது. அது இரு தரப்பும் பயன்படுத்துவதாக இருக்க வேண்டும்.
உள்நாட்டு போர் அல்லது வெளிநாட்டு சக்திகளின் ஆதிக்கம் ஏற்பட்டால், பனாமா கால்வாயை அமெரிக்கா மீண்டும் எடுத்துக் கொள்ளும் என்பதே அந்த ஒப்பந்தம்.
பெருவழி பாதை
மேலும், 1999ல் பனாமா கால்வாயை அமெரிக்காவிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையும் உள்ளது. ஆனாலும், இதை அமெரிக்கா வலியுறுத்தாமல் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், 'பெல்ட் அண்டு ரோடு இனிஷியேடிவ்' என்ற சர்வதேச அளவில் நாடுகளை இணைக்கும் பெருவழிப் பாதை திட்டத்தை சீனா உருவாக்கியது. இதில், பனாமாவும் இணைந்து கொண்டது.
குற்றச்சாட்டு
அமெரிக்காவின் அதிபராக சமீபத்தில் பதவியேற்ற டொனால்டு டிரம்ப், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்த திட்டத்தின் வாயிலாக, பனாமா கால்வாயை சீனா தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
பனாமா கால்வாயில் சீனாவின் ஆதிக்கத்தை ஏற்க முடியாது என்றும், பனாமா கால்வாயை மீண்டும் அமெரிக்கா எடுத்துக்கொள்ளும் என்றும் அவர் கூறி வந்தார்.
இந்த சூழ்நிலையில், அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ, தன் முதல் வெளிநாட்டு பயணமாக, பனாமா சென்றுள்ளார். அந்த நாட்டின் அதிபர் ஜோஸ் ரூயல் முலினோவை அவர் சந்தித்துப் பேசினார்.
அப்போது, அதிபர் டிரம்பின் நிலைப்பாட்டை அவர் விளக்கினார். சீனாவுடனான, பெருவழிப் பாதை திட்டத்தின் ஒப்பந்தத்தை கைவிடாவிட்டால், பனாமா மீது அமெரிக்கா நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று ரூபியோ கூறினார்.
இந்நிலையில், கடந்த, 2017ல் சீனாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பிக்கப் போவதில்லை என்று, பனாமா அதிபர் ஜோஸ் ரூயல் முலினோ உறுதியளித்தார்.
அமெரிக்காவின் கவலையைப் புரிந்து கொண்டு, இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.