உலகப் புகழ்பெற்ற பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் திருட்டு: பழங்கால நகைகளுடன் கொள்ளையர்கள் ஓட்டம்
உலகப் புகழ்பெற்ற பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் திருட்டு: பழங்கால நகைகளுடன் கொள்ளையர்கள் ஓட்டம்
ADDED : அக் 19, 2025 06:45 PM

பாரீஸ்: பிரான்சில் மோனோலிசா ஓவியம் வைக்கப்பட்டுள்ள உலகப் புகழ்பெற்ற அருங்காட்சியகத்தில் நகைகள் உள்ளிட்டவை திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து அந்தஅருங்காட்சியகம் மூடப்பட்டு உள்ளது.
பிரான்சின் பாரீஸ் நகரில் அமைந்துள்ளது லூவ்ரே அருங்காட்சியகம். கலை மற்றும் கலாசார பொக்கிஷங்களை பாதுகாக்கும் மையமாக உள்ள இங்கு, ஏராளமான பழங்கால பொருட்கள், சிற்பங்கள், வண்ண ஓவியங்கள் இங்கு வைக்கப்பட்டு உள்ளன. லியோனார்டோ டா வின்சி வரைந்த 16ம் நூற்றாண்டை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற மோனாலிசா ஓவியமும் இந்த அருங்காட்சியகத்தில் தான் வைக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக இந்த அருங்காட்சியகத்துக்கு தினமும் 30 ஆயிரம் பேர் வருவது வழக்கம். அந்தளவுக்கு கூட்டநெரிசல் மிகுந்த அருங்காட்சியகமாக இது திகழ்கிறது.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த அருங்காட்சியகத்தில் தான் கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளது. இதன் காரணமாக அந்த அருங்காட்சியகம் மூடப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக பிரான்ஸ் அமைச்சர் ரஷிதா டடி வெளியிட்ட அறிக்கையில், லூவ்ரே அருங்காட்சியகத்தில் இன்று காலை கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. போலீசார் மற்றும் ஊழியர்களுடன் அங்கு இருக்கிறேன். விலைமதிக்க முடியாத நகைகள் கொள்ளை போயுள்ளன. இந் கொள்ளை சம்பவம் 7 நிமிடங்கள் நீடித்தது எனத் தெரிவித்துள்ளார்.
ஸ்கூட்டரில் வந்த கொள்ளையர்கள், பொருட்கள் கொண்டு செல்லும் லிப்ட் வழியாக சென்று நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பியோடினர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு குறித்து கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. அந்நாட்டு ஊடகம் வெளியிட்ட செய்தியின்படி, அப்பல்லோ கேலரியில் ஜன்னல் கதவுகளை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் நெப்போலியன் காலத்து 9 நகைகளை கொள்ளையடித்து சென்றதாக கூறப்பட்டு உள்ளது. இதனையறிந்த மக்கள், அருங்காட்சியகம் முன்பு குவிந்ததால் பரபரப்பு நிலவுகிறது.