சூடானில் 1,500 பேர் படுகொலை துணை ராணுவப்படை அட்டூழியம்
சூடானில் 1,500 பேர் படுகொலை துணை ராணுவப்படை அட்டூழியம்
ADDED : அக் 31, 2025 01:54 AM
கார்டூம்:  சூடானில் ராணுவத்தின் கடைசி கோட்டையை கைப்பற்றிய ஆர்.எஸ்.எப்., என்ற துணை ராணுவப்படை, கடந்த மூன்று நாட்களில் 1,500 பேரைக் கொன்று, இனப்படுகொலையை அரங்கேற்றியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
வட ஆப்ரிக்க நாடான சூடானில், ராணுவ ஆட்சிக்கும், ஆர்.எஸ்.எப்., எனப்படும் துணை ராணுவப் படைக்கும் இடையே, அதிகாரப் போட்டி நிலவுகிறது. கடந்த 2023ம் ஆண்டு முதல் இரு தரப்பினர் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது.
இந்நிலையில், 17 மாத முற்றுகைக்குப் பின், டார்பூரில் ராணுவத்தின் கடைசி கோட்டையான எல் - -பஷார் நகரை, துணை ராணுவப் படை கைப்பற்றியது. டார்பூர் மாகாணம் அரேபியர் அல்லாதவர் அதிகம் வசிக்கும் பகுதி.
அதனால், முந்தைய ஆட்சியில் அவர்கள் மீது கடும் தாக்குதல்கள் நடந்து வந்தன. அதற்கு உடந்தையாக இருந்த ஆர்.எஸ்.எப்., தற்போது டார்பூரை கட்டுப்பாட்டில் எடுத்ததால், மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.
அதற்கு ஏற்றபடி ஆர்.எஸ்.எப்., வீரர்கள், கடந்த மூன்று நாட்களில் 1,500 பேரைக் கொன்றதாக உள்நாட்டுப் போரைக் கண்காணிக்கும் குழு தெரிவித்துள்ளது. ஒரு மருத்துவமனையில் மட்டும் நேற்று முன்தினம் 640 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த படுகொலைகளை சவுதி அரேபியா, எகிப்து, கத்தார், துருக்கி, ஜோர்டான் போன்ற நாடுகள் கண்டித்துள்ளன.
எல் - -பஷாரில் போர் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவரவும், மனிதாபிமான உதவிகளை வழங்கவும் அந்நாடுகள் வலியுறுத்தி உள்ளன. அமைதி தீர்வுக்கான பேச்சுக்கு வரும்படி ஆர்.எஸ்.எப்., படைக்கு அழைப்பும் விடுத்துள்ளன.

