வங்கதேசத்தில் பிப்., 12ல் பார்லிமென்ட் தேர்தல்! ஷேக் ஹசீனா கட்சி போட்டியிட முடியாது
வங்கதேசத்தில் பிப்., 12ல் பார்லிமென்ட் தேர்தல்! ஷேக் ஹசீனா கட்சி போட்டியிட முடியாது
ADDED : டிச 12, 2025 01:08 AM

டாக்கா: வங்கதேசத்தின், 13வது பார்லிமென்டுக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 12ம் தேதி நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில், அரசு வேலைகளில் அறிவிக்கப்பட்ட இடஒதுக்கீடுக்கு எதிராக, கடந்தாண்டு ஜூலை மற்றும் ஆகஸ்டில் மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தெருவில் இறங்கி போராடினர்.
ஒருகட்டத்தில் இது மக்கள் போராட்டமாக மாறியது. அதை கட்டுப்படுத்த போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் முயன்ற நிலையில், வன்முறை வெடித்தது.
போராட்டம்
நிலைமை கை மீறியதை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், நுாற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர். இதில் கோபமடைந்த போராட்டக்காரர்கள், அந்நாட்டு அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களை தீ வைத்து கொளுத்தினர்.
இதனால் ஏற்பட்ட பதற்றத்தையடுத்து, அந்நாட்டின் அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா, கடந்தாண்டு, ஆகஸ்ட் 5ம் தேதி தன் பதவியை ராஜினாமா செய்ததுடன், நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
இதையடுத்து, அந்நாட்டின் பொருளாதார நிபுணரான முகமது யூனுஸ் அந்நாட்டின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக நியமிக்கப்பட்டார். மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது குறித்தும், போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டது குறித்தும் விசாரணை நடத்த இடைக்கால அரசு ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்தது.
மேலும், ஷேக் ஹசீனா உள்ளிட்ட அவரது அமைச்சரவை சகாக்களை கைது செய்யுமாறு மாணவர் அமைப்பினர் தொடர் போராட்டங்களை நடத்தினர்.
இந்நிலையில், மாணவர் போராட்டத்தின் போது, அவர்களுக்கு எதிராக பாதுகாப்பு படையினரை ஏவி நுாற்றுக்கணக்கானோரை கொல்ல உத்தரவிட்ட காரணங்களுக்காக, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அந்நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் கடந்த மாதம் 17ல் மரண தண்டனை விதித்தது.
இதைத்தொடர்ந்து, மூன்று ஊழல் வழக்குகளில் ஹசீனா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து, கடந்த மாதம் 27ம் தேதி அவருக்கு ஒவ்வொரு வழக்கிலும் தலா ஏழு ஆண்டுகள் என, 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
பொது ஓட்டெடுப்பு
இந்நிலையில் அந்நாட்டின், 13வது பார்லிமென்டுக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 12ம் தேதி நடக்கும் என, அந்நாட்டு தலைமை தேர்தல் கமிஷனர் நசீர் உத்தீன் அறிவித்துள்ளார். இத்தேர்தலுடன், அரசி யல் சாசன திருத்தத்துக் கான பொது ஓட்டெடுப்பும் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 300 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடக்க உள்ளது. வெளிநாட்டில் வசிக்கும் வங்கதேசத்தினர் நாளை முதல் இம்மாதம் 25ம் தேதி வரை, 'ஆன்லைன்' வாயிலாக தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்கலாம் என, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் வரும் 29ம் தேதி; வேட்புமனு பரிசீலனை, வரும் 30 முதல் ஜன., 4 வரை நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருந்தாலும், அந்நாட்டின் முக்கிய கட்சியான ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால் இத்தேர்தலில் போட்டியிட முடியாது.

