'பதற்றம் தவிர்க்க இந்திய - ஆசியான் நாடுகளின் பங்கு அவசியம்' ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் உறுதி
'பதற்றம் தவிர்க்க இந்திய - ஆசியான் நாடுகளின் பங்கு அவசியம்' ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் உறுதி
ADDED : அக் 11, 2024 03:08 AM

வியன்டியன்,
“உலகின் பல பகுதிகளில் மோதல் மற்றும் பதற்றமான சூழல் நிலவும்போது, இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளின் நட்பு, ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது,” என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான 'ஆசியான்' அமைப்பில் புருனே, கம்போடியா, இந்தோனேஷியா, லாவோஸ், மலேஷியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய 10 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த கூட்டமைப்புக்கு நடப்பாண்டில் லாவோஸ் நாடு தலைமை வகிக்கிறது.
இந்நிலையில், ஆசியான் - இந்தியா இடையிலான 21வது உச்சி மாநாடு மற்றும் 19வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு ஆகியவை லாவோசின் வியன்டியன் நகரில் நேற்று துவங்கின.
ஒத்துழைப்பு
இந்த மாநாடுகளில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று லாவோஸ் சென்றார். பின்னர், 21வது உச்சி மாநாட்டில் பங்கேற்ற அவர் பேசியதாவது:
நான் 10 ஆண்டுகளுக்கு முன்பே பல முக்கிய கொள்கைகளை முன்வைத்தேன்; அது, தற்போது இந்தியாவுக்கும், ஆசியான் நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று உறவுகளுக்கு புதிய ஆற்றலையும், திசையையும், வேகத்தையும் தந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் ஆசியான் பிராந்தியத்துடன் ஆன இந்தியாவின் வர்த்தகம் 1,300 கோடி டாலர் ஆக அதிகரித்து உள்ளது. இந்த 21ம் நுாற்றாண்டு இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளுக்கான நுாற்றாண்டு என நம்புகிறேன்.
உலகின் பல பகுதிகள் மோதல்கள் மற்றும் பதற்றங்களை எதிர்கொள்ளும் இந்த நேரத்தில், இந்தியா- - ஆசியான் நட்பு, ஒருங்கிணைந்த உரையாடல் மற்றும் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது.
இந்தியாவும், ஆசியான் நாடுகளும் அண்டை நாடுகளாகவும், உலகளாவிய பங்குதாரர்களாகவும், விரைவான வளர்ச்சியைக் கண்டுவரும் பிராந்தியமாகவும் உள்ளன.
நாங்கள் அமைதியை விரும்பும் நாடுகள் மற்றும் ஒருவருக்கொருவர் தேசிய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை மதிக்கிறோம்.
நம் இளைஞர்கள் அனைவருக்கும் பிரகாசமான எதிர்காலத்தை உண்டாக்கி தரவேண்டிய கடமை நமக்கு உள்ளது. இந்தியா அதை கண்டிப்பாக செய்யும்.
பசுமை நிதி
ஆசியான் மையத்தை மனதில் வைத்து, கடந்த 2019ல் இந்தோ- - பசிபிக் பெருங்கடல்கள் முன்முயற்சியை இந்தியா துவங்கியது. கடந்த ஆண்டு, பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்காக கடல்சார் பயிற்சிகள் துவங்கப்பட்டன.
ஏழு ஆசியான் நாடுகளுக்கு இந்தியா நேரடி விமான சேவையை கொண்டுள்ளது. புருனேவிற்கு விரைவில் நேரடி விமான சேவை துவங்க உள்ளது.
கிழக்கு தைமூரில் இந்திய துாதரகம் திறக்கப்பட்டுள்ளது. மக்களை மையமாக கொண்ட நடைமுறையையே வளர்ச்சிக்கான அடிப்படையாக இந்தியா கருதுகிறது.
இந்தியாவில் செயல்படும் நாலந்தா பல்கலையின் உதவித்தொகை திட்டம் வாயிலாக, ஆசியான் நாடுகளைச் சேர்ந்த 3,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்துள்ளனர். கொரோனா பெருந்தொற்று ஆகட்டும், இயற்கை பேரிடர் ஆகட்டும், நாம் ஒருவருக்கொருவர் உதவி வருகிறோம்.
பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு வழங்குவதற்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிதி, டிஜிட்டல் நிதி மற்றும் பசுமை நிதி ஆகியன ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டறிக்கை
இந்தியா- - -ஆசியான் உச்சி மாநாட்டிற்குப் பின் வெளியிடப்பட்ட கூட்டறிக்கை:
ஆதார், யு.பி.ஐ., எனப்படும் ஒருங்கிணைந்த பணப் பரிவர்த்தனை போன்ற டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பைப் பயன்படுத்துவதில், இந்தியா தன் அனுபவத்தை ஆசியான் நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள முடிவு செய்துஉள்ளது.
டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு ஆதரவாக, இணைய பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்த உள்ளதாக, இரு தரப்பும் தெரிவித்துள்ளன.
கல்வி, சுகாதாரம், விவசாயம் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள, ஆசியான் நாடுகளுக்கு இந்தியா ஒத்துழைப்பையும் வழங்க உள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுஉள்ளது.

