அமைதி பேச்சு உண்டா - இல்லையா?: அமெரிக்கா - ஈரான் தொடர்ந்து பிடிவாதம்
அமைதி பேச்சு உண்டா - இல்லையா?: அமெரிக்கா - ஈரான் தொடர்ந்து பிடிவாதம்
ADDED : ஏப் 22, 2026 12:53 AM

டெஹ்ரான்: தற்காலிக இரண்டு வார போர் நிறுத்தம் முடிவுக்கு வரும் நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் தொடர்ந்து பிடிவாதம் பிடிப்பதால், இரண்டாம் கட்ட அமைதி பேச்சு நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேற்காசிய நாடான ஈரானுடனான போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், இரண்டு வார தற்காலிக போர் நிறுத்தத்தை அமெரிக்கா அறிவித்தது; இது இன்றுடன் முடிவுக்கு வருகிறது.
கருத்து மோதல்
இதற்கிடையே நம் அண்டை நாடான பாகிஸ்தான் மத்தியஸ்தத்துடன், சமீபத்தில் அமெரிக்கா - ஈரான் இடையே முதல் கட்ட பேச்சு நடந்தது.
முதலில் இரு தரப்பும், பாகிஸ்தானுடன் பேசின. அதில் தெரிவிக்கப்பட்ட நிபந்தனைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்காவும் ஈரானும் நேரடியாக பேசின. தொடர்ந்து, 21 மணி நேரம் நடந்த பேச்சு, உடன்பாடு எட்டப்படாமல் முடிந்தது.
இதைத் தொடர்ந்து, அமெரிக்கா - ஈரான் இடையே மீண்டும் பேச்சு நடத்துவதற்கான முயற்சிகளில் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டுள்ளன.
பேச்சுக்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் இரு தரப்புக்கும் இடையேயான கருத்து மோதல் தொடர்ந்தது.
அந்தப் பகுதியில் இருந்து அமெரிக்க படைகள் முழுதும் விலக்கிக் கொள்ள ஈரான் வலியுறுத்தியது. இது ஏற்கப்படாததால், ஜலசந்தியை ஈரான் முழுதும் முடக்கியது.
இந்த சூழ்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில், ஈரான் கொடியுடன் கூடிய சரக்கு கப்பலை அமெரிக்க கடற்படை பறிமுதல் செய்தது, பதற்றத்தை மேலும் அதிகரிக்க செய்தது.
அ மைதி பேச்சு நேற்று முன்தினம் நடப்பதாக இருந்தது; ஆனால், இந்த பிரச்னைகளால், எப்போது நடத்தப்படும் என்பது உறுதி செய்யப்படவில்லை. இரு தரப்பும் பிடிவாதத்தை தொடர்ந்ததால், நேற்றும் சந்திப்பு நடக்கவில்லை.
ஒரு பக்கம் அமைதி பேச்சு நடத்த தயாராக இருப்பதாக கூறிவரும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், மறுபக்கம் ஈரானுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிட்டார்.
வீடியோ கான்பரன்ஸ்
இதற்கு ஈரான் தரப்பும் பதில் பதிவுகளை வெளியிட்டு வருகிறது.
'மிரட்டல்களுக்கு மத்தியில் பேச்சில் பங்கேற்க மாட்டோம்' என, ஈரான் பார்லிமென்ட் சபாநாயகர் முகமது பாகெர் கலிபாப் நேற்று பதிவிட்டுள்ளார். 'பே ச்சு நடந்து உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஈரான் கடுமையான பாதிப்புகளை சந்திக்க நேரிடும்' என, டிரம்ப் பதிவிட்டதற்கு பதிலடியாக, கலிபாப் இந்த பதிவை வெளியிட்டிருந்தார்.
துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழு பாகிஸ்தாானுக்கு செல்லும் என்றும், தேவைப்பட்டால் நேரடியாக அல்லது வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக தான் பங்கேற்பதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.
ஆனால், ஈரான் தரப்பில் இருந்து, பேச்சில் பங்கேற்பது தொடர்பாக உறுதியான தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
தற்காலிக போர் நிறுத்தத்தை நீட்டிக்க வாய்ப்பே இல்லை என்று டிரம்ப் நேற்று கூறியுள்ளார். இரண்டு வார போர் நிறுத்தம் இன்று முடிவுக்கு வரும் நிலையில், அமைதி பேச்சு நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
