தொடரும் ஈரான், அமெரிக்கா தாக்குதல்கள்: முடங்கும் நிலைக்கு செல்கிறது அமைதி பேச்சு
தொடரும் ஈரான், அமெரிக்கா தாக்குதல்கள்: முடங்கும் நிலைக்கு செல்கிறது அமைதி பேச்சு
ADDED : ஜூன் 01, 2026 09:18 PM

வாஷிங்டன்: போர் நிறுத்தத்துக்கு மத்தியிலும் பரஸ்பர தாக்குதல்கள் நடைபெற்று வருவதால், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தத்துக்கான பேச்சு முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேற்காசியாவில் மூன்று மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் இழுபறியில் உள்ளன. இந் நிலையில், ஈரானும், அமெரிக்காவும் தங்கள் ராணுவ இலக்குகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.
சர்வதேச கடல்பகுதியில் அமெரிக்காவின் ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் தெரிவித்தது. இதற்கு பதிலடியாக போர்க் கப்பல்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த ஈரான் வான் பாதுகாப்பு அமைப்புகள், தரைக்கட்டுப்பாட்டு நிலையம் மற்றும் இரண்டு ட்ரோன்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, தெற்கு ஈரான் மீது, அமெரிக்கப் படைகள் நேற்று மீண்டும் தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடியாக தெற்கு ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா பயன்படுத்திய விமானப்படை தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. ஈரான் தாக்கியதில் மேற்காசிய நாடான குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் பாதிக்கப்பட்டது. ஈரானின் இந்நடவடிக்கைக்கு குவைத் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, ஈரானின் ஆதரவு பெற்ற ஹெஸ்பொல்லா அமைப்புக்கு எதிராக, லெபனான் நாட்டு எல்லைக்கும் மேலும் ஆழமாக ஊடுருவி தாக்குமாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தன் படைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இது அமெரிக்கா - ஈரான் இடையேயான அமைதி பேச்சுக்கு பெரும் முட்டுக்கட்டையாக மாறியுள்ளது.
ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை கொண்டு அணு ஆயுதம் தயாரிப்பதை தடுப்பதே இப்போரின் முக்கிய நோக்கம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். தங்கள் மீதான பொருளாதார தடைகளை நீக்க வேண்டும் மற்றும் வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானிய எண்ணெய் வருவாயை விடுவிக்க வேண்டும் என்பது ஈரானின் கோரிக்கையாக உள்ளது.
இந்த விவகாரங்களில் இருதரப்பும் இன்னும் முரண்பட்டே நிற்கின்றன. இதனால் அமைதி ஒப்பந்தம் மட்டுமின்றி அதற்கான பேச்சும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
