விரைவில் அமைதி கிடைக்கும்: அதிபர் டிரம்ப் மனைவி பேச்சு
விரைவில் அமைதி கிடைக்கும்: அதிபர் டிரம்ப் மனைவி பேச்சு
ADDED : மார் 04, 2026 05:26 AM

நியூயார்க்: ''அமெரிக்கா உலகம் முழுதும் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் ஆதரவாக உள்ளது. விரைவில் அவர்களுக்கு அமைதி கிடைக்கும் என்று நம்புகிறேன்,'' என ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மனைவி மெலானியா டிரம்ப் கூறினார்.
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலுக்கான இந்த மாதத்திற்கான தலைமைப் பொறுப்பை அமெரிக்கா ஏற்றுள்ளது. 'மோதலில் பாதிக்கப்படும் குழந்தைகள்' என்ற தலைப்பில் நேற்று முன்தினம் கூட்டம் நடந்தது. இதில், அதிபர் டொனால்டு டிரம்பின் மனைவி மெலானியா டிரம்ப் பங்கேற்க அனுமதிக்கப்பட்டார். அவர் குழந்தைகள் நலனில் ஆர்வமுடையவர்.
இந்தக் கூட்டத்தில் மெலானியா பேசியதாவது: அமெரிக்கா உலகெங்கும் இருக்கும் எல்லா குழந்தைகளுக்கும் ஆதரவு தருகிறது. உங்களுக்கு விரைவில் அமைதி கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். எல்லா சமூகங்களிலும் அறிவும் புரிதலும் முழுமையாக மதிக்கப்படும்போதுதான் நிலைத்த அமைதி வரும்.
அறிவும், ஞானமும் ஆளுகின்ற இடம் தான் அதிக அமைதியுடன் இருக்கும். உலகம் முழுதும் அமைதியை நிலைநாட்ட குழந்தைகள் வெற்றி பெற வேண்டும். அதற்கான வலிமையும் உறுதியும் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும் என விரும்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

