தேர்தலில் தோற்றால் குடும்பத்துடன் அமெரிக்கா குடிபுக திட்டமா ?: ரிஷி சுனாக் மறுப்பு
தேர்தலில் தோற்றால் குடும்பத்துடன் அமெரிக்கா குடிபுக திட்டமா ?: ரிஷி சுனாக் மறுப்பு
ADDED : மே 29, 2024 08:22 PM

லண்டன்: வரும் பார்லிமென்ட் தேர்தலில் தனது கட்சி தோல்வியுற்றால், அமெரிக்காவிற்கு குடும்பத்துடன் குடிபுக திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலை பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனாக் மறுத்தார்.
பிரிட்டனின் கன்சர்வேடிவ் கட்சியின் ரிஷி சுனாக் கடந்த 2022-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வருகிறார். இவரது பதவி காலம் 2025 ஜனவரியில் நிறைவடைகிறது. பிரிட்டன் பார்லிமென்ட்டிற்கு வரும் ஜூலை 04-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் தற்போதைய ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் வரப்போகும் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வியுற்றால், பிரதமராக உள்ள ரிஷி சுனாக், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் குடும்பத்துடன் குடிபுக திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகின.
இது தொடர்பாக பிரிட்டனில் ஐ.டி.வி., செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், தேர்தலில் தோற்றால் அமெரிக்க குடிபுக திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்தியில் உண்மையில்லை. அப்படி ஒரு போதும் நான் திட்டமிடவில்லை. எனது மகளின் அமெரிக்கா படிப்பு தொடர்பாக திட்டமிட்டுள்ளதை தவறான செய்தியாக வெளியிட்டுள்ளனர் என்றார்.