மோதலைத் தீர்க்க ஆதரவு: உக்ரைன் அதிபருக்கு உறுதி அளித்தார் மோடி
மோதலைத் தீர்க்க ஆதரவு: உக்ரைன் அதிபருக்கு உறுதி அளித்தார் மோடி
ADDED : செப் 24, 2024 06:56 AM

வாஷிங்டன்: அமெரிக்காவில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது அவர், மோதலைத் தீர்ப்பதற்கான இந்தியாவின் ஆதரவை மீண்டும் தெரிவித்தார்.
அமெரிக்கா, நியூயார்க்கில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, இருதரப்பு உறவுகள் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்பான விவகாரங்கள் குறித்து விவாதித்தார். இது, ஒரு மாதத்தில் பிரதமர் மோடி மற்றும் ஜெலென்ஸ்கி இடையே இரண்டாவது சந்திப்பு ஆகும்.
இது குறித்து சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், ' நியூயார்க்கில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை சந்தித்தேன். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த கடந்த மாதம் உக்ரைன் பயணத்தின் போது எடுத்த முடிவுகளை செயல்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். மோதலைத் தீர்ப்பதற்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என தெரிவித்தேன். உக்ரைனில் உள்ள மோதலை தீர்க்கவும், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என குறிப்பிட்டுள்ளார்.
வீடியோ வைரல்!
பிரதமர் மோடி ஜெலென்ஸ்கியை சந்தித்த போது எடுத்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவில், பிரதமர் மோடியும் ஜெலென்ஸ்கியும் கட்டிப்பிடித்து கைகுலுக்கி தங்களது அன்பை பகிர்ந்து கொள்கின்றனர். சந்திப்பின் போது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் உடன் இருந்தார்.