UPDATED : ஏப் 22, 2025 05:11 PM
ADDED : ஏப் 22, 2025 04:50 PM

ஜெட்டா: பிரதமர் மோடி சவுதி அரேபியா சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதன்படி ஜெட்டா நகருக்கு வந்தடைந்த பிரதமர் மோடிக்கு 21 குண்டுகள் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜெட்டா நகரில் பிரதமர் வந்து இறங்கியதும் அங்கு கூடியிருந்த இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் ' மோடி, மோடி' என கோஷம் போட்டனர். அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தபடி பிரதமர் சென்றார். அவரை வரவேற்கும் விதமாக கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.
முன்னதாக சவுதி அரேபியாவின் வான்பரப்பில் பிரதமர் மோடி பயணித்த விமானம் வந்ததும் அவரை கவுரவிக்கும் விதமாக அந்நாட்டு விமானப்படை விமானங்கள் உடன் வந்தன. சவுதி அரேபியாவிற்கு 3வது முறையாக செல்லும் பிரதமர் மோடி, கடந்த 40 ஆண்டுகளில் ஜெட்டா நகருக்கு செல்லும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
சவுதி வந்ததும், பிரதமர் மோடி வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: சவுதி அரேபியாவின் ஜெட்டா நகர் வந்தடைந்தேன். இந்த பயணமானது, இந்தியா மற்றும் சவுதி அரேபியாவின் நட்பை பலப்படுத்த உதவும். இன்றும், நாளையும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆர்வமாக உள்ளேன். இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் கூறியுள்ளார்.