இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்காது: சீனாவையும் வாங்க விடமாட்டேன் என்கிறார் டிரம்ப்
இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்காது: சீனாவையும் வாங்க விடமாட்டேன் என்கிறார் டிரம்ப்
ADDED : அக் 16, 2025 07:08 AM

வாஷிங்டன்: ''பிரதமர் மோடி விரைவில் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக உறுதி அளித்துள்ளார். சீனாவையும் அதே காரியத்தை செய்ய வைப்பேன்'' என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
இது குறித்து அதிபர் டிரம்ப் கூறியதாவது: பிரதமர் மோடியுடன் எனக்கு சிறந்த உறவு இருக்கிறது. அவர் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என எனக்கு உறுதி அளித்தார். இருப்பினும் இந்தியாவால் அதை உடனடியாக செய்ய முடியாது என்று பிரதமர் மோடி தன்னிடம் கூறினார். ஆனால் இந்த செயல்முறை விரைவில் முடிவடையும்.
இந்தியா எண்ணெய் வாங்குவதில் நான் மகிழ்ச்சி அடையவில்லை. சீனாவையும் அதே காரியத்தை செய்ய வைப்பேன். அதிபர் புடினிடமிருந்து நாங்கள் விரும்புவது இதை நிறுத்த வேண்டும். உக்ரைன் மக்களை கொல்வதை நிறுத்த வேண்டும். ரஷ்யர்கள் உக்ரைன் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்துவோம்.
இந்தியா எண்ணெய் வாங்கவில்லை என்றால், அது மிகவும் எளிதாக்குகிறது. இந்தியாவின் எண்ணெய் கொள்முதல் மறைமுகமாக உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை அதிகரிக்கிறது. தொடர்ச்சியான வர்த்தகம் பல மக்களை இழந்த இந்த அபத்தமான போரை ரஷ்யா தொடர அனுமதிக்கிறது. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவது, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு இன்றியமையாதது என மத்திய அரசு தெளிவுப்படுத்தி உள்ளது. ஏற்கனவே, தேசிய நலனுக்காக நாங்கள் முடிவுகளை எடுக்கிறோம் என மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.