சவுதி அரேபியாவில் பிரதமர் மோடி; முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது
சவுதி அரேபியாவில் பிரதமர் மோடி; முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது
ADDED : ஏப் 23, 2025 03:52 AM

ஜெட்டா : இரண்டு நாள் பயணமாக சவுதி அரேபியாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். இந்தப் பயணத்தின்போது, விண்வெளி, எரிசக்தி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில், ஆறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.
மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், 2023ல் இந்தியாவுக்கு பயணம் செய்தார். அவரது அழைப்பை ஏற்று, பிரதமர் மோடி தற்போது அந்த நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
கடந்த, 10 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக சவுதி அரேபியாவுக்கு பிரதமர் பயணம் மேற்கொண்டுள்ளார். வரலாற்று சிறப்புமிக்க ஜெட்டா நகருக்கு மோடி பயணம் செய்வது இதுவே முதல் முறை.
விமான நிலையத்தில் அவரை, அந்த நாட்டின் இளவரசர் சவுத் பின் மிஷால் பின் அப்துல் அஜீஸ் உள்ளிட்டோர் வரவேற்றனர். இரு நாட்டின் சிறப்பான நட்புறவை மதிக்கும் வகையில், பிரதமர் மோடிக்கு, 21 குண்டுகள் முழங்க, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
கடந்த, 2019ல் பிரதமர் மோடி, சவுதி அரேபியாவுக்கு சென்றபோது, பல்துறை கூட்டாளி கவுன்சில் உருவாக்கப்பட்டது. அதன் இரண்டாவது கூட்டத்தில், பட்டத்து இளவரசர் மற்றும் மோடி பங்கேற்க உள்ளனர்.
இதைத் தொடர்ந்து, இரு தரப்பு உறவுகள் தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர். விண்வெளி, எரிசக்தி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில், ஆறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத் தவிர, ஹஜ் பயணம் தொடர்பான கட்டுப்பாடுகளை விலக்கி கொள்வது தொடர்பாக மோடி ஆலோசிப்பார் என்று கூறப்படுகிறது.
விமான நிலையத்தில் இருந்து ஹோட்டலுக்கு வந்த பிரதமர் மோடிக்கு, அங்கு வசிக்கும் இந்தியர்கள் சிறப்பான வரவேற்பை அளித்தனர். சவுதி அரேபியாவில், 27 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர்.

