வெற்றிப்பாதையில் இருக்கும் மோடி மீண்டும் பிரதமராவார்: அமெரிக்க பாடகி விருப்பம்
வெற்றிப்பாதையில் இருக்கும் மோடி மீண்டும் பிரதமராவார்: அமெரிக்க பாடகி விருப்பம்
ADDED : ஜன 19, 2024 03:07 PM

வாஷிங்டன்: பார்லி., தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பாதையில் உள்ளதாகவும், அவர் மீண்டும் இந்தியாவின் பிரதமராக வேண்டுமென அமெரிக்காவில் நிறைய பேர் விரும்புவதாகவும் அமெரிக்க பாடகி மேரி மில்பென் கூறியுள்ளார்.
இந்திய பிரதமராக நரேந்திர மோடி, தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்று ஆட்சி செய்து வருகிறார். விரைவில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் 3வது முறையாக பிரதமர் வேட்பாளராக களம் இறங்குகிறார். அவர் மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாட்டிலும் பலர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆப்ரிக்க-அமெரிக்க பாடகியான மேரி மில்பென்,41, மோடி மீண்டும் இந்திய பிரதமராக வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.
பல ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ள மேரி மில்பென், கடந்த ஆண்டு பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்தபோது நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய தேசிய கீதத்தை பாடி கவனம் பெற்றார். இந்த நிலையில் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் அவர் கூறியதாவது: இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவிற்கு பிரதமர் மோடி சிறந்த தலைவராக விளங்குகிறார். பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் மிகப்பெரிய ஆதரவு உள்ளது.
மோடி மீண்டும் இந்தியாவின் பிரதமராக வேண்டுமென அமெரிக்காவில் நிறைய பேர் விரும்புகின்றனர் என நான் நம்புகிறேன். வரும் பார்லி., தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பாதையில் உள்ளார். ஏனென்றால், மோடி இந்தியாவின் சிறந்த தலைவர். நான் பிரதமர் மோடியின் மிகப்பெரிய ஆதரவாளர் என்பது இந்தியாவில் அனைவருக்கும் தெரியும். அதில் எந்த ரகசியமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

