எல்லையில் அமைதி நிலவுவது முக்கியம்: ஷீ ஜின்பிங்கிடம் மோடி வலியுறுத்தல்
எல்லையில் அமைதி நிலவுவது முக்கியம்: ஷீ ஜின்பிங்கிடம் மோடி வலியுறுத்தல்
UPDATED : அக் 23, 2024 08:28 PM
ADDED : அக் 23, 2024 05:52 PM

கஜன்: '' எல்லையில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நிலவுவது மிகவும் முக்கியமானது'', என சீன அதிபர் ஷீ ஜின்பிங்கை சந்தித்த போது பிரதமர் மோடி கூறினார்.
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்யாவுக்கு பிரதமர் மோடி ரஷ்யா சென்றுள்ளார். அங்கு, ரஷ்ய அதிபர் புடின், ஈரான் அதிபர் உள்ளிட்டோரை சந்தித்து பேசியிருந்தார். மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று(அக்.,23) பிரதமர் மோடி சீன அதிபரை சந்தித்து பேசினார்.
எல்லையில் ராணுவம் ரோந்து செல்வது தொடர்பாக இந்தியாவுக்கும், சீனாவுக்கும் உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
முக்கிய கட்டம்
இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடி கூறியதாவது:கஜன் நகரில் உங்களை சந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஐந்தாண்டுகளில் முதல் முறையாக தற்போது தான் முதல்முறை சந்தித்து உள்ளோம். நமது சந்திப்பு குறித்து, இருநாட்டு மக்களும் சர்வதேச சமூகமும் ஆர்வத்துடன் கவனித்து வருகின்றனர்.இந்தியாவும் சீனாவும், பழங்கால நாகரிகம் கொண்டதுடன், வளர்ந்து வரும் முக்கிய நாடுகள். நாம் இருவரும் நவீனமயமாக்கல் முயற்சியின் முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம்.
நமது நாட்டு மக்களுக்கு மட்டும் அல்லாமல், உலக அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு இந்தியா சீனா உறவு முக்கியமானது. எல்லையில் 4 ஆண்டுகளாக நிலவிய பிரச்னைக்கு ஏற்பட்ட தீர்வு வரவேற்கத்தக்கது. எல்லையில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நிலவுவது முக்கியமானது. பரஸ்பர நம்பிக்கை, மரியாதை ஆகியவையே நமது உறவுக்கு அடிப்படையாக இருக்க வேண்டும்.
நம்பிக்கை
அதிக தகவல் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பு கொண்டிருப்பதுடன், கருத்து வேறுபாடுகளை முறையாக கையாள வேண்டும். சர்வதேச கடமைகளை நமது தோளில் ஏற்றுக் கொண்டு செயல்படுவது முக்கியம். திறந்த மனதுடன் பேசுவோம் என்பதில் நம்பிக்கை உள்ளது. நமது ஆலோசனைகள் ஆக்கப்பூர்வமானதாக இருக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
முதல்முறை
இருவரும் 2020க்கு முன், 18 முறை சந்தித்துள்ளனர். எல்லையில் இரு நாட்டு ராணுவத்தினர் மோதிக்கொண்ட பிறகு, இரு தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு நிகழவில்லை. ஐந்தாண்டுக்கு பிறகு இப்போது தான் முதன் முறையாக சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.