பிரதமர் மோடிக்கு பேட் பரிசளித்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள்!
பிரதமர் மோடிக்கு பேட் பரிசளித்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள்!
ADDED : நவ 22, 2024 08:00 AM

ஜார்ஜ் டவுன்: கயானாவில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் மோடிக்கு பேட் பரிசளித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி தனது சுற்றுப்பயணத்தின் 3வது கட்டமாக கயானா சென்றார். தலைநகர் ஜார்ஜ் டவுன் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு அதிபர் முகமது இர்பான் அலியை பிரதமர் மோடி சந்தித்தார். இரு நாட்டு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
கயானா நாடு, மேற்கிந்திய தீவுகள் (வெஸ்ட் இண்டீஸ்) எனப்படும் கிரிக்கெட் கூட்டமைப்புக்கு உட்பட்டதாகும். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியில் கயானா நாட்டைச் சேர்ந்த பல வீரர்கள் விளையாடி புகழ் பெற்றனர். அணியின் முன்னாள் கேப்டன்களான கிளைவ் லாயிட், சிவ்நாராயண் சந்திர பால், கார்ல் கூப்பர் உள்ளிட்ட பலர் இந்த அணியில் விளையாடிய முன்னணி வீரர்கள்.
பிரதமர் மோடி கயானா சென்ற நிகழ்வில், அந்த நாட்டின் பிரபல கிரிக்கெட் வீரர்களும் கலந்து கொண்டு அவருக்கு வரவேற்பு அளித்தனர்.
தாங்கள் இந்தியா வந்திருந்தபோது சந்தித்த அனுபவங்கள் பற்றி கிரிக்கெட் வீரர்கள் பிரதமர் மோடியுடன் மகிழ்ச்சியுடன் கலந்துரையாடினர். அவர்கள், மோடிக்கு கிரிக்கெட் பேட்டை பரிசாக அளித்தனர். இந்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்து பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: நம் இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் உறவு ஆழமானது; மிகவும் முக்கியமானது.
கயானாவின் முன்னணி கிரிக்கெட் வீரர்களுடன் ஒரு மகிழ்ச்சியான உரையாடல். விளையாட்டு நமது நாடுகள் இடையே நெருக்கமான உறவை ஏற்படுத்துகிறது. நமது கலாசார தொடர்புகளை எடுத்துரைக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.