யு.ஏ.இ., அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு: புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
யு.ஏ.இ., அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு: புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
ADDED : பிப் 13, 2024 05:07 PM

அபுதாபி: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் முகமது பின் ஜாயேத் அல் நயானை சந்தித்து பேசினார். அப்போது இரு நாட்டுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்.,13) சென்றார். அபுதாபியில் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயணன் கோவிலை நாளை அவர் திறந்து வைக்கிறார். இன்று மாலை சையீத் விளையாட்டு மைதானத்தில், ஐக்கிய அரபு எமிரேட்சில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பங்கேற்கும் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார்.
'அஹலான் மோடி' அதாவது 'வணக்கம் மோடி' என்ற தலைப்பிலான நிகழ்ச்சியில் பங்கேற்க, எமிரேட்சின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் 60,000க்கும் மேற்பட்டோர் பதிவு செய்திருந்தனர்.
முன்னதாக, யு.ஏ.இ அதிபர் முகமது பின் ஜாயேத் அல் நயானை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்நிகழ்வின்போது இரு நாட்டுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த சந்திப்பின்போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் உடன் இருந்தார்.
அப்போது பிரதமர் மோடி பேசுகையில், ''அன்புடன் வரவேற்றதற்கு நன்றி. உங்களைச் சந்திக்க வரும்போதெல்லாம், எனது குடும்பத்தினரை சந்திக்க வந்ததாக உணர்கிறேன். கடந்த 7 மாதங்களில் நாங்கள் 5 முறை சந்தித்துள்ளோம். இது மிகவும் அரிதானது மற்றும் இரு நாட்டுக்கு இடையிலான நெருங்கிய உறவை பிரதிபலிக்கிறது'' என்றார்.