மலேசியாவில் ஆசியான் மாநாட்டிற்காக பிரமாண்ட ஏற்பாடு
மலேசியாவில் ஆசியான் மாநாட்டிற்காக பிரமாண்ட ஏற்பாடு
ADDED : அக் 23, 2025 08:55 AM

கோலாலம்பூர்: மலேசியாவில் நடைபெறும் ஆசியான் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வரும் அக் 26ம் தேதி முதல் அக் 28ம் தேதி வரை ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாடுகள் நடைபெற உள்ளன. இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தகப் பதற்றம் நீடித்து வரும் நிலையில் இந்த மாநாடுகள் நடக்கின்றன.
இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூட்டங்களில் கலந்து கொள்வார் என உறுதி செய்யப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில ஆண்டுகளில் ஆசியான்-இந்தியா உச்சிமாநாடு மற்றும் கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டில் இந்திய பிரதிநிதிகளை பிரதமர் வழிநடத்தியுள்ளார். எனினும் இந்த முறை மாநாட்டில் அவர் பங்கேற்க வாய்ப்பு இல்லை.
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பல நாடுகளின் தலைவர்களை மலேசியா அழைத்துள்ளது.
அதிபர் டிரம்ப் அக்டோபர் 26ம் தேதி கோலாலம்பூருக்கு இரண்டு நாள் பயணமாக பயணம் செய்ய உள்ளார். ஆசியான் கூட்டமைப்பில் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருனே, வியட்நாம், லாவோஸ், மியான்மர் மற்றும் கம்போடியா ஆகிய 10 உறுப்பு நாடுகள் இடம் பெற்றுள்ளன.