தேர்தல் முடிவுகள் வெளியான தினமே மக்கள் அச்சம் விலகி விட்டது; சொல்கிறார் ராகுல்
தேர்தல் முடிவுகள் வெளியான தினமே மக்கள் அச்சம் விலகி விட்டது; சொல்கிறார் ராகுல்
UPDATED : செப் 10, 2024 11:05 AM
ADDED : செப் 10, 2024 06:45 AM

வாஷிங்டன்: இந்தியா அனைவருக்கும் சொந்தமானது என்பதை பா.ஜ., புரிந்து கொள்ளவில்லை என லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.,யுமான ராகுல் தெரிவித்தார்.
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் ராகுல் பேசியதாவது: லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான சில நிமிடங்களிலேயே பா.ஜ., மீதும், இந்திய பிரதமர் மோடி மீதும் மக்கள் கொண்டிருந்த அச்சம் விலகிவிட்டது. இந்த பயத்தின் சூழலைத் தூண்டுவதற்கு அவர்களுக்கு பல ஆண்டுகள் ஆகியது. ஆனால் அது சில நொடிகளில் மறைந்துவிட்டது.
சித்தாந்தம்
ஆர்.எஸ்.எஸ்., சொல்வது என்னவென்றால், சில மாநிலங்கள் மற்ற மாநிலங்களை விட தாழ்ந்தவை. சில மொழிகள் மற்ற மொழிகளை விட தாழ்ந்தவை. சில மதங்கள் மற்ற மதங்களை விட தாழ்ந்தவை. சில சமூகங்கள் மற்ற சமூகங்களை விட தாழ்ந்தவை. எல்லா மாநிலத்துக்கும் அதன் வரலாறு, பாரம்பரியம் உண்டு. தமிழ், பெங்காலி, மணிப்பூரி ஆகியவை தாழ்ந்த மொழிகள் என்பது ஆர்.எஸ்.எஸ்., சிந்தாந்தம்.
வங்கி கணக்குகள்
இந்தியா அனைவருக்கும் சொந்தமானது என்பதை பா.ஜ., புரிந்து கொள்ளவில்லை. இந்தியா ஒரு ஒன்றியம் என்பதை நமது அரசியலைப்பு சட்டம் எடுத்துரைக்கிறது. லோக்சபா தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன்பு, எங்களது வங்கி கணக்குகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டது. நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என அவர்கள் நினைத்தனர். ஆனால் நாங்கள் தைரியமாக தேர்தலை எதிர்கொண்டோம். இவ்வாறு ராகுல் பேசினார்.

