ரிசார்ட்டில் விஷ வாயு கசிவு: ஜார்ஜியாவில் இந்தியர்கள் 11 பேர் பலி!
ரிசார்ட்டில் விஷ வாயு கசிவு: ஜார்ஜியாவில் இந்தியர்கள் 11 பேர் பலி!
ADDED : டிச 16, 2024 10:21 PM

திபிலிசி: ஜார்ஜியா நாட்டு ரிசார்ட்டில் கார்பன் மோனாக்சைடு வாயு கசிவால் இந்தியர்கள் 11 பேர் பலியாகி உள்ளனர்.
ஐரோப்பிய நாடான ஜார்ஜியா, முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்த நாடுகளில் ஒன்றாகும். கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்காக, இந்தியர்கள் ஏராளமான பேர் இந்நாட்டுக்கு செல்கின்றனர்.
இங்குள்ள குதாவ்ரி பகுதியில் மலையின் மீது ரிசார்ட் அமைந்துள்ளது. இந்த ரிசார்ட்டில் திடீரென கார்பன் மோனாக்சைடு விஷ வாயு பரவியது. இதனால் அங்கிருந்த 12 பேர் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.
பலியானவர்கள் அனைவரும் ரிசார்ட்டில் பணிபுரிந்தவர்கள் என்றும், 12 பேரில் 11 பேர் இந்தியர்கள் எனவும் தெரியவந்துள்ளது. ரிசார்ட்டின் இரண்டாவது மாடியில் ஓய்வெடுக்கும் பகுதியில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
பணியாளர்கள் பலியான சம்பவம் குறித்து திபிலிசியில் உள்ள இந்திய துாதரகத்திற்கு தகவல் சொல்லப்பட்டது. இச்சம்பவம் குறித்து நேரில் சென்று பார்த்து விசாரித்த இந்திய துாதரக அதிகாரிகள் கூறியதாவது:
பலியான இந்தியர்களுக்கு எதிராக, வன்முறை ஏதுவும் நிகழ்த்தப்படவில்லை என்பதை உறுதிபடுத்தியுள்ளோம். கார்பன் மோனாக்சைடு விஷவாயு தாக்கி, இந்தியர்கள் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தூதரகம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து இறந்தவர்களின் உடலைத் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்கிறோம்.
இந்தியாவில் இருக்கும் பலியானவர்களின் குடும்பங்களுடன் தொடர்பில் இருக்கிறோம். சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.
கவன குறைவால் இந்த சம்பவம் இருந்திருக்கலாம். ஜார்ஜியாவின் குற்றவியல் சட்டத்தின் 116 வது பிரிவின் கீழ் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இவ்வாறு இந்திய துாதரக அதிகாரிகள் கூறினர்.