ஜப்பானில் சக்திவாய்ந்த பூகம்பம்: சுனாமி தாக்கியதால் பரபரப்பு
ஜப்பானில் சக்திவாய்ந்த பூகம்பம்: சுனாமி தாக்கியதால் பரபரப்பு
ADDED : ஏப் 20, 2026 06:00 PM

டோக்கியோ: ஜப்பானில் சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு சுனாமி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
உலகில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நாடுகளில் ஒன்றாக ஜப்பான் உள்ளது.இந்நிலையில், ஜப்பானின் வடக்குகடலோர பகுதியில் சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவானது. சான்ரிகு கடற்கரைக்கு அப்பால், பசுபிக் பெருங்கடலில் 10 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
இதனையடுத்து அந்நாட்டு வானிலை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்தது. 3 மீட்டர் உயரம் அலை எழும்பக்கூடும் என எச்சரித்து இருந்தது. இவாடே, ஆமோரி மற்றும் ஹொக்கைடோவின் தென் கிழக்கு பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பூகம்பம் ஏற்பட்ட 40 நிமிடத்திற்கு பிறகு, இவாடே நகரில் உள்ள குஜி என்ற துறைமுகத்தை சுனாமி அலைகள் தாக்கின. சுமார் 80 செ.மீ., உயரத்துக்கு அலைகள் தாக்கின. இதனையடுத்து,சுனாமி காரணமாக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ள வானிலை மையம், கடல் மற்றும் நதிக்கரையோர பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம். சுனாமி எச்சரிக்கை விலக்கி கொள்ளும் வரை யாரும் பாதுகாப்பான இடங்களில் இருந்து வெளியேற வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.
பூகம்பம் மற்றும் சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
