பாகிஸ்தானில் அதிபர்,பிரதமர் அதிகாரம் பறிப்பு! : ஆட்சியை கையில் எடுத்தார் ராணுவ தளபதி
பாகிஸ்தானில் அதிபர்,பிரதமர் அதிகாரம் பறிப்பு! : ஆட்சியை கையில் எடுத்தார் ராணுவ தளபதி
UPDATED : நவ 11, 2025 11:58 PM
ADDED : நவ 11, 2025 11:36 PM

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில், அணு ஆயுதம் முதல் நாட்டின் நீதித்துறை வரை, பரவலான முக்கிய அதிகாரங்கள் அனைத்தையும் ராணுவ தளபதி அசிம் முனீருக்கு வழங்கும், 27வது அரசியலமைப்பு சட்ட திருத்தம், அந்நாட்டின் பார்லிமென்டின் இரு சபைகளிலும் வெற்றிகரமாக நிறைவேறி உள்ளது. அமைதியான ராணுவ புரட்சி என்று கூறப்படும் இதன் மூலம், பாக்., பிரதமர் மற்றும் அதிபரின் பதவிகள், 'வெத்து' நாற்காலிகளாக மாற உள்ளன.
அனைத்து அதிகாரங்களும் அசிம் முனீரிடமே இனி இருக்கும் என்பது, இந்தியாவுக்கு ஆபத்து என்று கூறப்படுகிறது . நம் அண்டை நாடான பாகிஸ்தானில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பதவி வகித்தாலும் ஆட்சியின் கட்டுப்பாடு பெரும்பாலும், அந்நாட்டு ராணுவத்திடமே இருக்கும்.
முதல்முறை
கட்டுப்பாடு கைமீறுகிறது என தெரிந்தால், இரவோடு இரவாக ஆட்சியை கவிழ்த்து விட்டு, ராணுவ ஆட்சியை அமல்படுத்தி விடுவர். இதற்கு முன், 1958ல் பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருந்த அயூப் கான், முதல் முறையாக ராணுவ ஆட்சியை அறிவித்தார்.
அவருக்கு பின், ராணுவ தளபதிகளாக இருந்த, முகமது ஜியா உல் ஹக், 1977லும், பர்வேஷ் முஷாரப், 1999லும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கலைத்து விட்டு, நேரடி ராணுவ ஆட்சியை அறிவித்தனர்.
இந்த ராணுவ ஆட்சிகள் பல ஆண்டுகள் நீடித்தன. பொருளாதார வளர்ச்சியில், பாகிஸ்தான் பின் தங்கியதற்கு, இந்த ராணுவ ஆட்சிகளே காரணம் என்றும் கூறப்படுகிறது.
தற்போது பாக்., ராணுவ தளபதியாக அசிம் முனீர் உள்ளார். பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவி வகிக்கிறார். அசிம் முனீரின் பதவிக்காலம் வரும், 28ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
தற்போது அவர், 'பீல்டு மார்ஷல்' என்ற அந்தஸ்தில் உள்ளார். அந்த வகை உயர் பிரிவுக்கு, பதவி நீட்டிப்பு செய்ய, பாக்., அரசியலமைப்பு சட்டத்தில் இடமில்லை.
இதற்கு முட்டுக் கட்டையாக அரசிய லமைப்பு சட்டத்தின், 243வது பிரிவு இருந்தது.
அதில் திருத்தம் செய்யும், 27வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதாவை ஷெபாஸ் ஷெரீப் அரசு, பாகிஸ்தான் பார்லிமென்டின் இரு சபைகளிலும் அறிமுகப்படுத்தியது. அதாவது, தேசிய சபையில் ஏற்கனவே நிறைவேறிய இந்த மசோதா, செனட் எனப்படும், மேலவையிலும் நேற்று வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
புதிய திருத்தம்
இது, பாகிஸ்தான் அரசியலமைப்பில் கொண்டு வரப்பட்ட மிகப் பெரிய மாற்றம். இதுவரை பாக்.,கில், நிழல் ஆட்சியை ராணுவம் நடத்தி வந்தது. தற்போதைய திருத்தம் மூலம் ராணுவம் சட்டபூர்வமான ஆட்சியாளராக மாறுகிறது.
புதிய திருத்தம், ராணுவம், கடற்படை, விமானப்படை என முப்படைகளுக்கான அதிகாரமும், ஒரே நபரிடம் இருக்கும் வழியை ஏற்படுத்தி தந்துள்ளது. அதற்காக முப்படைகளின் தலைமை தளபதி பதவி உருவாக்கப்படுகிறது. அந்தப் பதவிக்கு அசிம் முனீர் நியமிக்கப்பட உள்ளார்.
இதுவரை முப்படைகளுக்கான அதிகாரம், அதிபர் மற்றும் அமைச்சரவை கட்டுப்பாட்டில் இருந்தது. இனி அது, ஒரு நபரின் கீழ் வரும். புதிய சட்ட திருத்தம், தலைமை தளபதி பதவியில் இருக்கும் வரை ஒருவர் மீது, எந்த குற்றத்திற்கும் வழக்கு தொடர முடியாத பாதுகாப்பையும் ஏற்படுத்தி தருகிறது.
மேலும், அணு ஆயுத கட்டுப்பாடும் முழுக்க முழுக்க ராணுவம் வசமாக உள்ளது. பாகிஸ்தான் நீதித்துறையும் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் வழக்குகளில் விரும்பிய தீர்ப்புகளை பெறும் நிலையும் ஏற்படும். ராணுவம், நீதித்துறை, அணு ஆயுத கட்டுப்பாடு, அமைச்சரவை அனைத்தும், 27வது சட்ட திருத்தத்தின் மூலம் ஒரே நபரின் கையில் வர உள்ளதால், சட்டப்பூர்வ ராணுவ ஆட்சியை அசிம் முனீர் சாத்தியமாக்கி உள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் ராணுவ தளபதிகளான ஜியா உல் ஹக், முஷாரப் ஆகியோர் முயன்றும் முடியாததை துப்பாக்கி ஏந்தாமல் முடித்து காட்டி உள்ளார் அசிம் முனீர். இதன் வாயிலாக, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் அதிகாரம், அசிம் முனீரின் கையில் இருக்கும். அதிபர் அசிப் அலி ஜர்தாரியின் பதவியும் வெறும் அலங்கார பதவியாகவே இருக்கும்.

