தொழிலதிபர் எலான் மஸ்க் கடையை மூடிவிட்டு ஆப்ரிக்கா செல்ல நேரிடும்; அதிபர் டிரம்ப் மிரட்டல்
தொழிலதிபர் எலான் மஸ்க் கடையை மூடிவிட்டு ஆப்ரிக்கா செல்ல நேரிடும்; அதிபர் டிரம்ப் மிரட்டல்
ADDED : ஜூலை 02, 2025 06:48 AM

வாஷிங்டன் : அமெரிக்காவில் அமலுக்கு வர உள்ள பெரிய அழகான வரி எனப்படும் செலவினம் மற்றும் வரி குறைப்புக்கான மசோதாவை தொழிலதிபர் எலான் மஸ்க் விமர்சித்தார்.
அவருக்கு அதிபர் டிரம்ப் தந்த பதிலில், 'மஸ்கின் தொழிலுக்கான மானியங்களை நிறுத்தினால் அவர் கடையை மூடிவிட்டு பூர்விகமான தென் ஆப்ரிக்காவுக்கே செல்ல வேண்டி இருக்கும்' என்றார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பிப்ரவரியில் செலவினம் மற்றும் வரி குறைப்புக்கான பெரிய அழகிய மசோதாவை கொண்டு வந்தார். இந்த மசோதாவின் முதல் வரைவு மே மாதம் வெளியிடப்பட்டது.
இதில், தனிநபர் வருமான வரி, தொழில் வரி மற்றும் பிற வரிகள் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அரசுக்கு 33 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும்.
மேலும், புலம்பெயர்ந்தோர் மற்றும் ராணுவத்துக்கு 2.90 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். அரசின் கடன் உச்ச வரம்பு 40 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்த்தப்படும் என கூறப்பட்டிருந்தது.
மற்றொரு புறம் அரசின் மருத்துவக் காப்பீடுக்கான நிதி, மின்சார வாகனங்களுக்கான மானியம் ஆகியவை குறைக்கப்படும் போன்ற அம்சங்கள் மசோதாவில் உள்ளன.
இது மே மாதம் கீழவையில் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேறியது. அதைத் தொடர்ந்து செனட்டில் முன்வைக்கப்பட்டது.
அதை விவாதத்திற்கு ஏற்பதற்கான நடைமுறை ஓட்டெடுப்பில் டிரம்பின் குடியரசு கட்சி வென்றது. தற்போது மசோதாவின் சாதக பாதகங்கள் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், 'இந்த மசோதா அமெரிக்காவை 'போர்க்கி பிக் கட்சி' எனப்படும் ஒற்றைக் கட்சி நாடாக மாற்றுகிறது. இந்த மசோதா நிறைவேறினால் மக்களுக்கு ஒரு புதிய அரசியல் கட்சி தேவை' என்று தொழிலதிபர் எலான் மஸ்க் கூறினார்.
இந்த மசோதாவை ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பதால் அதிபர் டிரம்ப் உடனான அவரின் உறவு முறிந்தது. எலான் மஸ்கின் கருத்துக்கு அதிபர் டிரம்ப் தந்த பதில் அறிக்கை:
என்னை அதிபர் பதவிக்கு ஆதரிப்பதற்கு முன்பே, நான் கட்டாய மின்சார வாகனங்கள் திட்டத்திற்கு எதிரானவன் என்பது எலான் மஸ்கிற்கு நன்கு தெரியும். மின்சார வாகனம் நல்லது தான்.
அதற்காக அனைவரும் ஒரு மின்சார கார் வைத்திருக்க வேண்டும் என கட்டாயப்படுத்துவது பைத்தியக்காரத்தனம்.
இதனால், வரலாற்றில் இதுவரை எந்த மனிதனும் பெறாத அளவுக்கு அதிக மானியம் மஸ்கிற்கு கிடைக்கக்கூடும்.
மானியங்கள் இல்லையென்றால், மஸ்க் கடையை மூடிவிட்டு தென் ஆப்ரிக்காவுக்குத் திரும்ப வேண்டியிருக்கும். அதன் பின் ராக்கெட் ஏவ முடியாது. செயற்கைக்கோள் அல்லது மின்சார கார் உற்பத்தி இருக்காது.
இது குறித்து அரசு செயல்திறன் துறையான டாஜி ஆய்வு செய்து, பெரிய அளவிலான நிதியை சேமிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.