ADDED : ஜூன் 30, 2025 01:12 AM

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரி குறைப்பு, அமெரிக்க அரசின் கடன் உச்சவரம்பை அதிகப்படுத்துவதற்காக 'பெரிய அழகான வரி' என்ற பெயரில் கொண்டு வந்த மசோதா நேற்று செனட்டில் விவாதம் மற்றும் திருத்தங்களுக்கு அனுமதிக்கும் நடைமுறை ஓட்டெடுப்பில் இரு ஓட்டுகளில் தேர்வானது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிப்ரவரியில், வரி குறைப்பு மற்றும் நாட்டின் கடன் உச்சவரம்பை அதிகப்படுத்தும் பெரிய அழகிய மசோதாவை கொண்டு வந்தார். இந்த மசோதாவின் முதல் வரைவு மே மாதம் வெளியிடப்பட்டது.
அதில், தனிநபர் வருமான வரிகள், தொழில் வரிகள் மற்றும் பிற வரி வகைகளை குறைத்திருந்தனர். இதனால் அரசுக்கு 33 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், பல அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
பிரதிநிதிகள் சபையில் நிறைவேறிய இந்த மசோதா செனட்டில் இறுதி வரைவுடன் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.
இரண்டு ஓட்டுகள் வித்தியாசத்தில் மசோதா விவாதத்திற்கு ஏற்கப்பட்டது. இதன் வாயிலாக செனட்டில் முதல் தடையை டிரம்பின் மசோதா வெற்றிகரமாக கடந்துள்ளது.
இறுதி வரைவில், அமெரிக்காவில் இருந்து வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பினால் அதற்கு 5 சதவீதம் வரி விதிக்க முன்மொழிந்திருந்ததை, ௧ சதவீதமாக குறைத்துஉள்ளனர்.
இதனால் அமெரிக்க வாழ் இந்தியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் ஆண்டுக்கு 2.68 லட்சம் கோடி ரூபாயை நம் நாட்டுக்கு அனுப்புகின்றனர்.