ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25% வரி: அதிபர் டிரம்ப் அடுத்த அதிரடி அறிவிப்பு
ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25% வரி: அதிபர் டிரம்ப் அடுத்த அதிரடி அறிவிப்பு
UPDATED : ஜன 14, 2026 01:46 AM
ADDED : ஜன 14, 2026 01:07 AM

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அடுத்தகட்டமாக, ஈரானுடன் வர்த்தகம் செய்யும் அனைத்து நாடுகளுக்கும் 25 சதவீதம் வரி விதிப்பதாக அறிவித்துள்ளார். இந்த முடிவின் காரணமாக, ஈரானின் நெருங்கிய வர்த்தக கூட்டாளிகளான இந்தியா, சீனா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய பொருட்களின் மீது அமெரிக்கா ஏற்கனவே 50 சதவீதம் இறக்குமதி வரி விதித்துள்ளது. இதில் 25 சதவீத வரி, ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதற்காக விதிக்கப்பட்ட கூடுதல் வரி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், “ஈரானுடன் வர்த்தகம் செய்யும் எந்த ஒரு நாடும், அமெரிக்கா உடனான தனது வர்த்தகத்துக்கு 25 சதவீத கூடுதல் வரி செலுத்த வேண்டும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. இதுவே இறுதியானது, இதில் எந்த மாற்றமும் இருக்காது,” என டிரம்ப், தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
சமீபத்திய, ஆண்டுகளில் ஈரானின் 'டாப் 5' வர்த்தக கூட்டாளிகளில் ஒன்றாக இந்தியா விளங்கி வருகிறது. சீனா, துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பாகிஸ்தான், அர்மேனியா உள்ளிட்ட நாடுகளும் ஈரானுடன் குறிப்பிடத்தக்க வர்த்தகம் செய்து வரும் நிலையில், இந்நாடுகளும் பாதிக்கப்படும் என தெரிகிறது.
கலக்கம்
இதனிடையே, இந்த வரி விதிப்பு அறிவிப்பின் காரணமாக இந்திய ஏற்றுமதியாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். மேலும், ஏற்கனவே விதித்துள்ள 50 சதவீத வரி போக இது கூடுதலாக விதிக்கப்படுமா என்ற தெளிவுக்காக பலரும் காத்திருக்கின்றனர்.
“அமெரிக்க அரசு ஈரான் மீது ஏற்கனவே விதித்துள்ள பொருளாதார தடைகளுக்கு, இந்திய நிறுவனங்களும், வங்கிகளும் முழுமையாக இணக்கம் தெரிவித்துள்ளன.
''மனிதாபிமான அடிப்படையில் அனுமதிக்கப்பட்டுள்ள உணவு மற்றும் மருந்து பொருட்கள் பிரிவில் மட்டுமே வர்த்தகம் நடைபெற்று வருகிறது. எனவே, மிகப்பெரிய பாதிப்பை எதிர்பார்க்க வேண்டியதில்லை,” என 'பியோ' எனும் இந்திய ஏற்றுமதியாளர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.

