மனைவி குழந்தைகளுடன் பிரதமர் மோடியை சந்தித்தார் எலான் மஸ்க்
மனைவி குழந்தைகளுடன் பிரதமர் மோடியை சந்தித்தார் எலான் மஸ்க்
UPDATED : பிப் 13, 2025 11:45 PM
ADDED : பிப் 13, 2025 09:23 PM

வாஷிங்டன்: அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடியை உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தன் மனைவி குழந்தைகளுடன் சந்தித்து பேசினார்.
பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி, இரண்டு நாள் பயணமாக அதிபர் டிரம்ப்பின் அழைப்பின் பேரில் அமெரிக்கா சென்றார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர், அமெரிக்க உளவுத்துறைத் தலைவர் துளசி கப்பார்டை சந்தித்து பேசினார். அப்போது பயங்கரவாதம் , பாதுகாப்பு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இரவு, பிரதமர் மோடியை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் வால்ட்ஸ் சந்தித்து பேசினார்.
இதனைத் தொடர்ந்து இந்திய நேரப்படி10: 15 மணியளவில் அதிபரின் விருந்தினர் மாளிகையில் தங்கி உள்ள பிரதமர் மோடியை, , டி.ஓ.ஜி.இ., எனப்படும் சிறந்த நிர்வாகத்துக்கான துறை என்ற அரசு துறையின் தலைவர் எலான் மஸ்க் சந்தித்து பேசினார்.
எலான் மஸ்க் - பிரதமர் மோடி சந்திப்பது இது முதல்முறை அல்ல. கடந்த 2015ம் ஆண்டு, அமெரிக்கா சென்றிருந்த மோடி, சான் ஜோஸ் நகரில் எலான் மஸ்க்கை சந்தித்ததுடன், அவரின் டெஸ்லா நிறுவனத்தை சுற்றிப் பார்த்தார். அப்போது, மோடியை தனிப்பட்ட முறையில் எலான் மஸ்க் , நிறுவனத்தை சுற்றிக் காண்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று இரவு எலான் மஸ்க் தன் மனைவி மூன்று குழந்தைகளுடன் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது மோடிக்கு எலான் மஸ்க் நினைவுபரிசு வழங்கினார். அவரை தொடர்ந்து விவேக் ராமசாமியும் மோடியை சந்தித்து பேசினார்.
இதனைத் தொடர்ந்து அவர், இன்று இரவு இந்திய நேரப்படி 2:35 மணியளவில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேசுகிறார். இந்தச் சந்திப்பிற்கு பிறகு, இரு தலைவர்களும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பின் போது, பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.