உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்கு ஐ.நா.,வில் சீர்திருத்தங்கள் தேவை பிரதமர் மோடி பேச்சு
உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்கு ஐ.நா.,வில் சீர்திருத்தங்கள் தேவை பிரதமர் மோடி பேச்சு
ADDED : செப் 24, 2024 02:14 AM

நியூயார்க், ''உலக அளவில் அமைதி மற்றும் வளர்ச்சியை உறுதி செய்வதற்கு, ஐ.நா., போன்ற சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தம் தேவை. இந்த சீர்திருத்தங்களே, அதன் இருப்பை தக்க வைக்கும்,'' என, ஐ.நா.,வில் நடந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். ஐ.நா., பொது சபையில் உலகின் எதிர்காலம் என்ற மாநாட்டில் அவர் நேற்று பேசியதாவது:
உலகின் எதிர்காலம் என்பது குறித்து நாம் விவாதிக்கும்போது, அதில் மனிதகுலத்தை அடிப்படையாக கொண்ட முயற்சிகளுக்கே அதிக முன்னுரிமை தர வேண்டும். நீடித்த வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும்போது, அதில் மக்களின் நலன், உணவு, சுகாதாரம், பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
இந்தியாவில் 25 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்டுள்ளோம். இதுவே, நீடித்த வளர்ச்சியை வெற்றிகரமாக செயல்படுத்தியதற்கு சிறந்த உதாரணமாக இருக்கும். எங்களுடைய இந்த அனுபவத்தை, 'குளோபல் சவுத்' எனப்படும் வளர்ந்து வரும் நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளோம்.
மனிதகுலத்தின் வெற்றி என்பது, அனைவரது ஒருங்கிணைந்த சக்தியிலேயே உள்ளது; போர்க்களத்தில் அல்ல.
உலகில் அமைதி மற்றும் வளர்ச்சியை உறுதி செய்ய, ஐ.நா., போன்ற சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தம் தேவை. இந்த சீர்திருத்தங்களே, இந்த அமைப்புகளின் இருப்பை தக்க வைக்கும். டில்லியில் நடந்த மாநாட்டில், ஜி - 20 அமைப்பில், ஆப்ரிக்க யூனியன் நிரந்தர உறுப்பினராக சேர்க்கப்பட்டது, இந்த வகையில் அது மிக முக்கியமான முடிவாகும்.
உலக அமைதிக்கு, பயங்கரவாதம் தொடர்ந்து ஒரு அச்சுறுத்தலாகவே உள்ளது. மறுபக்கம், சைபர் குற்றங்கள், கடல்சார் மற்றும் விண்வெளி தாக்குதல் புதிய அச்சுறுத்தல்களாக உள்ளன. இந்த விவகாரங்களில், உலக நாடுகள் அனைத்தும் ஒரே நோக்கத்துடன் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.
தற்போதைய தொழில்நுட்ப யுகத்தில், அவற்றை பாதுகாப்பாகவும், பொறுப்புடனும் பயன்படுத்துவது அவசியம். இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்காத உலகளாவிய டிஜிட்டல் நிர்வாகம் தேவை என்பதை வலியுறுத்துகிறோம்.
டிஜிட்டல் பொது கட்டமைப்புகள் என்பது பாலமாக இருக்க வேண்டும்; தடுப்புகளாக இருக்கக் கூடாது. உலக நலனுக்காக, இதில் எங்களுடைய நல்ல அனுபவங்களை பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளோம். இந்தியாவைப் பொறுத்தவரை, ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதில் உறுதியாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த மாநாட்டில், உலகளாவிய எதிர்காலம் என்பது தொடர்பான ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. உலகளாவிய டிஜிட்டல் ஒத்துழைப்பு, எதிர்கால சந்ததியினருக்கான உறுதிமொழி போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன.
அமைதி மற்றும் பாதுகாப்பு, நீடித்த வளர்ச்சி, பருவநிலை மாறுபாடு, டிஜிட்டல் ஒத்துழைப்பு, மனித உரிமை, பாலின சமத்துவம், இளைஞர் மற்றும் எதிர்கால சந்ததியினர், உலகளாவிய நிர்வாகம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது.

