பிரதமர் மோடி-ஜி ஜின்பிங் சந்திப்பு: இந்திய வெளியுறவு செயலாளர் உறுதி!
பிரதமர் மோடி-ஜி ஜின்பிங் சந்திப்பு: இந்திய வெளியுறவு செயலாளர் உறுதி!
UPDATED : அக் 22, 2024 10:21 PM
ADDED : அக் 22, 2024 10:15 PM

கஜன்: பிரிக்ஸ் மாநாட்டையொட்டி, பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே நாளை இரு தரப்பு சந்திப்பு நடைபெறும் என வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறினார்.
பிரிக்ஸ் கூட்டமைப்பின் மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடின் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆகியோரை இன்று சந்தித்து பேசினார். இதனையடுத்து நாளை(அக்-23) சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசுகிறார்.
மாநாட்டில் கலந்து கொள்ளும் சீன அதிபர் ஜின்பிங்கும், பிரதமர் மோடியும் இரு தரப்பு உறவு குறித்து பேச்சு நடத்தலாம் என சில நாட்களாக தகவல்கள் கசிந்து வந்தன.
இந்த நிலையில், சீன வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் லின் ஜியான், அப்படி ஏதாவது இருந்தால் தகவல் தெரிவிக்கப்படும் என்று நேற்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது:
இரு தலைவர்களும் ரஷ்யாவின் கஜனில் உள்ளனர். நாளை சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கிறார். பேச்சு வார்த்தை நடக்க உள்ளது.
இந்தியா-சீனா உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இந்த சந்திப்பு அடிக்கோடிட்டுக் காட்டும்.
இருவருடைய சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இவ்வாறு விக்ரம் மிஸ்ரி கூறினார்.