பொருளாதார நோபல் பரிசு அறிவிப்பு: நிபுணர்கள் 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு
பொருளாதார நோபல் பரிசு அறிவிப்பு: நிபுணர்கள் 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு
UPDATED : அக் 13, 2025 03:36 PM
ADDED : அக் 13, 2025 03:33 PM

ஸ்டாக்ஹோம்: பொருளாதார நோபல் பரிசு அமெரிக்கா, பிரிட்டனைச் சேர்ந்த நிபுணர்கள் 3 பேருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடான ஸ்வீடனை சேர்ந்த வேதியியலாளரும், தொழில் அதிபருமான ஆல்பிரட் நோபல் நினைவாக நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. இது, உலகின் மிகவும் உயர்வான விருதாக கருதப்படுகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம் மற்றும் அமைதி என ஆறு பிரிவுகளில் வழங்கப்படுகிறது. இந்த விருதை பெறுவது மிகப்பெரிய கவுரவமாக பார்க்கப்படுகிறது.
வழக்கம் போல, இந்தாண்டுக்கான விருதுகளுக்கு உரியவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை மருத்துவம், இயற்பியல், வேதியியல், அமைதி மற்றும் இலக்கியத்துவக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், இந்தாண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது.
ஜோயல் மோகிர், பிலிப் அகியோன் மற்றும் பீட்டர் ஹோவிட் ஆகிய 3 பேருக்கு கூட்டாக வழங்கப்படுகிறது. புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியை தெளிவுப்படுத்தியமைக்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜோயல் மோகிர், பீட்டர் ஹோவிட் ஆகிய இருவர் அமெரிக்காவை சேர்ந்தவர்கள். பிலிப் அகியோன் பிரிட்டன் நாட்டவர் ஆவர்.
இந்தாண்டு நோபல் பரிசு வென்றவர்கள் யார் யார்?
* மருத்துவம்- அமெரிக்காவைச் சேர்ந்த மேரி பிரங்கோ, பிரட் ராம்ஸ்டெல் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த ஷிமொன் சாகாகுச்சி ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிப்பு.
* இயற்பியல்- அமெரிக்காவை சேர்ந்த ஜான் கிளார்க், மைக்கேல் டிவோரெட், ஜான் மார்ட்டினிஸ் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிப்பு.
* வேதியியல்- சுசுமு கிடகாவா (ஜப்பான்) , ரிச்சர்ட் ராப்சன் (ஆஸ்திரேலியா), ஒமர் எம்.யாகி (அமெரிக்கா) ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிப்பு.
* இலக்கியம்- எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர் (ஹங்கேரி).
* அமைதி- மரியா கொரினா மச்சாடோ (வெனிசுலா)
* பொருளாதாரம்- அமெரிக்காவை சேர்ந்த ஜோயல் மோகிர், பீட்டர் ஹோவிட், பிலிப் அகியோன் (பிரிட்டன்) ஆகிய 3 நிபுணர்களுக்கு கூட்டாக அறிவிப்பு.