நேபாளத்தில் மீண்டும் போராட்டம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது
நேபாளத்தில் மீண்டும் போராட்டம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது
ADDED : நவ 20, 2025 11:24 PM
காத்மாண்டு: நேபாளத்தில் இளைஞர்களுக்கும், முன்னாள் பிரதமர் சர்மா ஒலி ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் அங்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நம் அண்டை நாடான நேபாளத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 'ஜென் இசட்' என்ற இளம் தலைமுறையினர் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதனால் வன்முறை வெடித்தது. முன்னாள் பிரதமர் சர்மா ஒலி பதவி விலகினார்.
உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்க்கி தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. அதன்பின் அங்கு இயல்பு நிலை திரும்பியது.
ஆனால் திடீரென்று இளைஞர்களுக்கும், சர்மா ஒலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் - ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.
பரா மாவட்டத்தில் ந டந்த பேரணியின்போது ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதால் பதற்றம் அதிகரித்தது. இதனால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வன்முறையைத் தடுக்க மாவட்டத்தின் முக்கிய இடங்களில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

