உலகப்போராக மாற்ற முயற்சி; மேற்கு நாடுகள் மீது ரஷ்யா அதிபர் குற்றச்சாட்டு
உலகப்போராக மாற்ற முயற்சி; மேற்கு நாடுகள் மீது ரஷ்யா அதிபர் குற்றச்சாட்டு
ADDED : நவ 22, 2024 11:26 AM

மாஸ்கோ: 'இரு நாடுகளுக்கு இடையிலான போரை உலகப்போராக மேற்கத்திய நாடுகள் மாற்ற முயற்சி செய்கிறது' என ரஷ்யா அதிபர் புடின் குற்றம் சாட்டியுள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் போர், 1,000 நாட்களை கடந்தும் தொடர்கிறது. உக்ரைனுக்கு பொருளாதார உதவிகள் மட்டுமின்றி, ஆயுதங்களையும் அமெரிக்கா வழங்கி உள்ளது. போரில் ரஷ்யாவின் கை ஓங்குவதை தடுக்க, அந்த நாட்டுக்கு எதிராக நீண்ட துாரம் பயணித்து தாக்கும் திறன் உடைய ஏவுகணையை உக்ரைன் பயன்படுத்தலாம் என்று அமெரிக்கா சமீபத்தில் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி உக்ரைன் ராணுவமும், அமெரிக்கா மீது நீண்ட தொலைவு செல்லும் திறன் கொண்ட ஏவுகணைகளை வீசி தாக்கியது. இதற்கு பதிலடி தரும் வகையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரஷ்யா முதல்முறையாக பயன்படுத்தி உள்ளது.
இந்நிலையில் ரஷ்ய ஊடகங்களுக்கு, அதிபர் புடின் அளித்த பேட்டி: ரஷ்யா மீது தாக்குதல் நடத்த தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் வழங்கி உதவுகிறது. இரு நாடுகளுக்கு இடையிலான போரை உலகப்போராக மேற்கத்திய நாடுகள் மாற்ற முயற்சி செய்கிறது. ரஷ்யா மீது தாக்குதல் நடத்த ஏவுகணைகளை வழங்கும் நாடுகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும்.
தக்க பதிலடி
ரஷ்யாவிற்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்தும் நாடுகளின் ராணுவ வசதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்த ரஷ்யாவிற்கு உரிமை உண்டு. சர்வதேச பாதுகாப்பு அமைப்பை அழிப்பது ரஷ்யா அல்ல, அமெரிக்காதான் என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்த விரும்புகிறேன்.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்து பார்த்தோம். உக்ரைனை நீண்ட தூர ஏவுகணைகள் மூலம் ரஷ்ய நிலப்பரப்பை தாக்க அனுமதிப்பதன் மூலம் போர் தீவிரம் அடைந்து வருகிறது. நாங்களும் தக்க பதிலடி கொடுப்போம். இவ்வாறு புடின் கூறினார்.