தேவைப்பட்டால் உக்ரைன் அதிபருடன் புடின் பேசுவார்: ரஷ்யா அரசு அறிவிப்பு
தேவைப்பட்டால் உக்ரைன் அதிபருடன் புடின் பேசுவார்: ரஷ்யா அரசு அறிவிப்பு
ADDED : பிப் 18, 2025 09:40 PM

மாஸ்கோ: தேவைப்பட்டால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பேச்சு நடத்துவார் என்று ரஷ்ய அதிபர் மாளிகை வட்டாரம் தெரிவித்துள்ளது.
உக்ரைனில் 2 ஆண்டுக்கும் மேலாக நீடிக்கும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் உயர்மட்ட ராஜதந்திரிகள் சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உக்ரைன் அதிகாரிகள் யாரும் பங்கேற்கவில்லை; அழைக்கப்படவும் இல்லை.
இந்த பேச்சுவார்த்தை குறித்து ரஷ்யா அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் பெஸ்கோவ் கூறியதாவது:
தேவைப்பட்டால் ஜெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அதிபர் புடின் தெரிவித்துள்ளார். ஆனால் ஜெலென்ஸ்கியின் சட்டபூர்வமான தன்மை கேள்விக்குள்ளாக்கப்படலாம் என்ற யதார்த்தத்தைக் கருத்தில் கொண்டு ஒப்பந்தங்களின் சட்ட அடிப்படை குறித்து விவாதம் தேவைப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஜெலென்ஸ்கி கூறுகையில், 'நாங்கள் பங்கேற்காத எந்த அமைதி ஒப்பந்தங்களையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
ஒரு இறையாண்மை கொண்ட நாடாக, நாங்கள் இல்லாமல் எந்த ஒப்பந்தங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

