தப்பான ஆங்கிலத்தில் தடாலடி கேள்விகள்; இங்கிலாந்து கேப்டனை திணறடித்த பாக்., பத்திரிகையாளர்
தப்பான ஆங்கிலத்தில் தடாலடி கேள்விகள்; இங்கிலாந்து கேப்டனை திணறடித்த பாக்., பத்திரிகையாளர்
ADDED : அக் 25, 2024 10:01 AM

ராவல்பிண்டி: பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஆங்கிலத்தில் தட்டுத் தடுமாறி கேள்வி கேட்டதால், இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பதில் சொல்ல முடியாமல் திணறினார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு போட்டிகள் முடிந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் தொடரில் சமநிலை வகிக்கின்றன.
இந்த நிலையில், தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் போட்டியான, பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில், முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, 267 ரன்களை குவித்தது.
அதிகபட்சமாக, ஜேமி ஸ்மித் 89 ரன்னும், டக்கெட் 52 ரன்னும் எடுத்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் சஜித் கான் 6 விக்கெட்டும், நூமன் அலி 3 விக்கெட்டும், மஹ்முத் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். தொடர்ந்து பேட் செய்த பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 73 ரன் எடுத்திருந்தது.
பின்னர், இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பாகிஸ்தானைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர், தப்பு தப்பாக ஆங்கிலத்தில் தட்டுத் தடுமாறி கேள்வி எழுப்பினார். கேள்வி புரியாமல் தவித்த ஸ்டோக்ஸ், இருமுறை கேள்வியை திரும்பக் கேட்குமாறு கூறினார்.
கடைசியாக, 3வது முறையாக பத்திரிகையாளர் மீண்டும் தடுமாற, பென் ஸ்டோக்ஸ், அவர் என்ன கேட்க வருகிறார் என்பதை யூகித்து, அதற்கு பதிலளித்துச் சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.