கனடா உணவகத்தில் இந்தியர் மீது இனவெறி தாக்குதல்; வீடியோ வெளியாகி அதிர்ச்சி
கனடா உணவகத்தில் இந்தியர் மீது இனவெறி தாக்குதல்; வீடியோ வெளியாகி அதிர்ச்சி
ADDED : நவ 04, 2025 09:22 PM

டொரொன்டோ: கனடாவில் உள்ள ஹோட்டலில் இந்தியர் ஒருவர் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சமீபகாலமாக கனடாவில் இந்தியர்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது. தற்போது, மெக்டொனால்டு உணவகத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் மீது இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், இனவெறி கருத்துக்களைக் கூறிக்கொண்டே இந்தியர் மீது ஒரு நபர் தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
சமீபத்தில், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வசித்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தர்ஷன் சிங் சஹ்சி, 68, சுட்டுக் கொல்லப்பட்டார். அதேபோல், எட்மண் நகரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 55 வயதான அர்வி சிங் சாகூ என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கனடாவில் இனவெறி மற்றும் அந்நிய வெறுப்பு குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது இந்தியர் மீது தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகி இருக்கிறது.இந்திய வம்சாவளியினரை குறிவைத்து நடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக சமூகவலைதள பயனர்கள் வன்முறையை கண்டித்துள்ளனர்.

