பாதுகாப்பு விதிமுறைகளை மீறுகிறார் ராகுல்: சிஆர்பிஎப் புகார்
பாதுகாப்பு விதிமுறைகளை மீறுகிறார் ராகுல்: சிஆர்பிஎப் புகார்
UPDATED : செப் 11, 2025 07:42 PM
ADDED : செப் 11, 2025 04:30 PM

புதுடில்லி: '' வெளிநாடு பயணத்தின் போது, இசட் பிளஸ் பாதுகாப்பில் இருக்கும் காங்கிரஸ் எம்பி ராகுல், விதிமுறைகளை தொடர்ந்து மீறுகிறார்'', என சிஆர்பிஎப் புகார் கூறியுள்ளது.
காங்கிரஸ் எம்பியும் லோக்சபா எதர்க்கட்சித் தலைவருமான ராகுல், 'Advnced Security Liaison ' உடன் கூடிய 'இசட் பிளஸ்' பாதுகாப்பில் உள்ளார். அவருக்கு உள்ள அச்சுறுத்தல் காரணமாக இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. அவருக்கு 24 மணி நேரமும், சிஆர்பிஎப் கமாண்டோக்கள் 10 பேர் மற்றும் போலீசார் உட்பட 36 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் ராகுல் அடிக்கடி வெளிநாடு செல்வது வழக்கம். அந்த வகையில், சமீபத்தில் இத்தாலி, வியட்நாம், துபாய், கத்தார், லண்டன் மற்றும் மொரீஷியசுக்கு பயணம் சென்ற போது ராகுல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறினார் என சிஆர்எப் கூறியுள்ளது.
'' Yellow Book'' நெறிமுறைகளின்படி, இசட் பிளஸ் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பாதுகாப்பில் இருப்பவர்கள், வெளிநாடு பயணம் மற்றும் வெளியூர் செல்வது குறித்த தகவல்களை முன்கூட்டியே பாதுகாப்பு படையினருக்கு அளிக்க வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்ய முடியும். ஆனால், இந்த விதிமுறைகளை ராகுல் பின்பற்றவில்லை என சிஆர்பிஎப் தெரிவித்துள்ளது.
இதனால், பாதுகாப்பு ஏற்பாடுகளில் தொய்வு ஏற்படுவதாகவும், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ள சிஆர்பிஎப், இது குறித்து காங்கிரஸ் தலைவர் கார்கே மற்றும் ராகுலுக்கு கடிதம் எழுதியுள்ளது. எதிர்காலத்தில் இதனை தவிர்க்கும்படி தெரிவித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் இன்னும் விளக்கம் அளிக்கவில்லை.
பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவதாக ராகுல் மீது குற்றச்சாட்டு வருவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்னர் இது போல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.