அமெரிக்கா சென்ற ராகுல்: பல்கலை மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்
அமெரிக்கா சென்ற ராகுல்: பல்கலை மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்
ADDED : செப் 08, 2024 06:17 PM

வாஷிங்டன்: அமெரிக்கா சென்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
காங்கிரஸ் எம்.பி.,யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல், 3 நாள் பயணமாக ( செப்.,08-10) அமெரிக்காவின் டெக்சாஸின் டல்லாஸ் நகர் வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை, இந்திய வம்சாவளியினர் மற்றும் அயலக காங்கிரஸ் உறுப்பினர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் ராகுல் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் டல்லாஸ் நகரில் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் அயலக காங்கிரஸ் உறுப்பினர்கள் எனக்கு அளித்த வரவேற்புக்கு நான் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பயணத்தில் இரு நாடுகளுக்கும் பிணைப்பை ஏற்படுத்தும் அர்த்தமுள்ள விவாதங்கள் மற்றும் உரையாடல்களில் ஈடுபட ஆவலுடன் இருக்கிறேன். இவ்வாறு அதில் ராகுல் கூறியுள்ளார்.
3 நாள் பயணமாக அமெரிக்கா சென்ற ராகுல், இன்று( செப்.,08) டல்லாசில் உள்ள டெக்சாஸ் பல்கலையில் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். பிறகு 9 மற்றும் 10ம் தேதிகளில் வாஷிங்டன் செல்லும் ராகுல், அங்கு நடக்கும் பல்வேறு கலந்துரையாடல் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்.